உள்ளூர் செய்திகள்
திருப்பூர் பெரிய தோட்டம் பகுதியில் கொசு மருந்து அடிக்கும் பணி நடைபெற்றதை படத்தில் காணலாம்.

வீடு வீடாக சென்று ஆய்வு-திருப்பூரில் டெங்கு தடுப்பு பணிகள் தீவிரம்

Published On 2021-12-02 10:53 GMT   |   Update On 2021-12-02 10:53 GMT
திருப்பூர் மாவட்டத்தில் 6 ஆண்டுகளுக்கு முன் டெங்கு காய்ச்சல் அதிக அளவு பரவியிருந்தது.
திருப்பூர்:

திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து கொண்டிருக்கிறது. மாவட்டம் முழுவதும் பருவமழை பெய்து கொண்டே இருப்பதால் பொது இடங்களில் மழைநீர் தேங்கியுள்ளது. 

இதனால் டெங்கு பாதிப்பு மீண்டும் தலைதூக்கியுள்ளது. அவிநாசி, கணக்கம்பாளையம், பெருமாநல்லூர், பொங்குபாளையம், ஈட்டிவீரம்பாளையம் ஊராட்சி பகுதிகளில் காய்ச்சலால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. 

இதனால் நோய் தடுப்பு மற்றும் கொசு ஒழிப்பு பணிகளை முடுக்கிவிட வேண்டுமென மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. மாநகர் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில்  குப்பைகள் கொட்டும் பகுதியிலும், வழித்தடத்திலும் மழைநீர் தேங்கியுள்ளது. பலநாள் தேக்கத்தால் கொசு தொல்லை அதிகரித்துள்ளது. 

எனவே கொசு ஒழிப்பு மற்றும் நோய் தடுப்பு பணியில் கவனம்செலுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

திருப்பூர் மாவட்டத்தில் 6 ஆண்டுகளுக்கு முன் டெங்கு காய்ச்சல் அதிக அளவு பரவியிருந்தது. பல்வேறு ஆங்கில மருத்துவ சிகிச்சையை காட்டிலும் பப்பாளி இலைச்சாறு, நிலவேம்பு கஷாயம் மட்டுமே டெங்குவை கட்டுப்படுத்தியது. 

எனவே மாவட்ட நிர்வாகம், தன்னார்வ அமைப்புகளுடன் இணைந்து மக்களுக்கு நிலவேம்பு கஷாயம் வழங்கும் முகாம்களை நடத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் திருப்பூரில் டெங்கு காய்ச்சலுக்கு சிறுவன் பலியானதையடுத்து மாநகர் மற்றும் மாவட்டம் முழுவதும் டெங்கு தடுப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி மாநகராட்சி பகுதியில் வார்டுகள் தோறும் புகைமருந்து அடிக்கும் பணி தொடங்கியுள்ளது.  

மேலும் 4 மண்டலங்களிலும் நியமிக்கப்பட்டுள்ள கொசு ஒழிப்பு பணியாளர்கள் 300 பேர் ஒவ்வொரு வீடு வீடாக சென்று ஆய்வு செய்ய உள்ளனர். வீடுகளில் தண்ணீர் தேங்கி உள்ளதா? கொசு உற்பத்திக்கான காரணிகள் உள்ளதா? என்பதை கண்டறிந்து அதனை தடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர். கடைகள், நிறுவனங்களில் கொசு உற்பத்தி காரணி கண்டறியப்பட்டால் அபராதம் விதிக்க திட்டமிடப்பட்டுள்ளது. 

மேலும் பொதுமக்களுக்கு எந்தவகை கொசுவால் டெங்கு பரவும், அதனை தடுப்பதற்கான வழிமுறைகள் குறித்து பொதுமக்களுக்கு துண்டுபிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. தன்னார்வலர்கள் மூலம் இப்பணி மேற்கொள்ளப்படுகிறது. 
Tags:    

Similar News