செய்திகள்
மேட்டுப்பாளையம் அருகே ஓடந்துறை பகுதியில் சாலையில் சுற்றி திரிந்த பாகுபலி யானை.

மீண்டும் குடியிருப்பு பகுதிகளுக்குள் உலா வரத் தொடங்கிய பாகுபலி யானை - பொதுமக்கள் அச்சம்

Published On 2021-09-20 07:41 GMT   |   Update On 2021-09-20 07:41 GMT
வனத்தை விட்டு வெளியில் வராமல் இருந்த பாகுபலி யானை திடீரென மீண்டும் குடியிருப்புகள் நிறைந்த பகுதிகளில் உலா வரத் தொடங்கியுள்ளது மக்கள், விவசாயிகளுக்கு அதிர்ச்சியையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

மேட்டுப்பாளையம்:

கோவை வனக்கோட்டத்திற்குட்பட்ட மேட்டுப்பாளையம் சிறுமுகை மற்றும் அதனை சுற்றியுள்ள அடர்ந்த வனப்பகுதிகளில் பாகுபலி என்ற காட்டு யானை தனியாக சுற்றி திரிகிறது.

இந்த யானை உணவு மற்றும் தண்ணீருக்காக வனத்தையொட்டி உள்ள கிராமங்களுக்குள் வருவதையும், பின்னர் அங்கிருந்து தோட்டங்களுக்குள் சென்று பயிர்களை மிதித்தும், தின்று சேதப்படுத்துவதையும் வழக்கமாக வைத்திருந்தது.

வனப்பகுதியில் இருந்து வெளியேறும் பாகுபலி காட்டு யானையின் நடமாட்டத்தை கண்டறிந்து மீண்டும் வனப்பகுதிக்குள் விரட்டவும், பயிர் சேதங்களை தடுக்கவும் பாகுபலி காட்டு யானைக்கு ரேடியோ காலம் பொருத்த தேவையான நடவடிக்கைகளை வனத்துறையினர் மேற்கொண்டனர்.

இதற்காக கால்நடை குழு உருவாக்கப்பட்டதுடன், 3 கும்கி யானைகளையும் வரவழைத்து பாகுபலி யானையை பிடிக்கும் பணியில் வனத்துறையினர் இறங்கினர்.

ஆனால் பாகுபலி யானை அடர்ந்த வனத்திற்குள் சென்றதால் ரேடியோ காலர் பொருத்தும் பணியை நிறுத்தி விட்டு, கும்கி யானைகள் முகாமுக்கு அனுப்பப்பட்டன.அதன் பின்னர் சிறிது காலம் வனத்துறையினரின் கண்ணில் படாமல் அடர்ந்த வனப்பகுதியில் நடமாடி வந்த பாகுபலி காட்டு யானை தற்போது வனப்பகுதியை ஒட்டியுள்ள கிராமங்களுக்குள் மீண்டும் உலா வர தொடங்கியுள்ளது.

பாகுபலி காட்டு யானை அடர்ந்த வனப்பகுதிக்குள் சென்று வேறு யானை கூட்டங்களோடு சேர்ந்து விட்டது என நிம்மதி பெரு மூச்சு விட்ட வனத்துறையினருக்கு பாகுபலி காட்டு யானையின் நடமாட்டம் பெரும் சவாலாக உருவெடுத்துள்ளது.

இந்த நிலையில் நேற்று இரவு மேட்டுப்பாளையம் நகரை யொட்டியுள்ள ஓடந்துறை என்னுமிடத்தில் சாலை வழியே வழக்கம் போல் தன்னந்தனியே நடந்து சென்ற பாகுபலி யானை அங்குள்ள தோட்டத்திற்குள் நுழைய முயன்றது.

இதை பார்த்த பொதுமக்கள் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் விரைந்து வந்து பட்டாசுகளை வெடித்து யானை வனப்பகுதிக்குள் விரட்டினர்.

இவ்வளவு நாட்கள் வனத்தை விட்டு வெளியில் வராமல் இருந்த பாகுபலி யானை திடீரென மீண்டும் குடியிருப்புகள் நிறைந்த பகுதிகளில் உலா வரத் தொடங்கியுள்ளது மக்கள், விவசாயிகளுக்கு அதிர்ச்சியையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து வனத்துறையினர் மீண்டும் பாகுபலி யானையின் நடமாட்டத்தை தொடர்ந்து கண்காணிக்க தொடங்கியுள்ளனர். 

Tags:    

Similar News