ஆன்மிகம்
சிதம்பரம் நடராஜர் கோவில் தேரோட்டம்

சிதம்பரம் நடராஜர் கோவில் தேரோட்டம்

Published On 2019-07-08 05:24 GMT   |   Update On 2019-07-08 05:24 GMT
சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆனி திருமஞ்சன விழாவையொட்டி, தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆனி திருமஞ்சன விழா கடந்த 29-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவில் கடந்த 3-ந் தேதி இரவு தெருவடைச்சான் உற்சவம் நடந்தது.

சிகர திருவிழாவான ஆனிதிருமஞ்சன தேரோட்டம் நேற்று வெகுவிமரிசையாக நடைபெற்றது. இதையொட்டி அதிகாலையில் கோவில் நடை திறக்கப்பட்டு மூலவருக்கு ரகசிய பூஜை நடந்தது.

தேர் மண்டபத்தில் பச்சையப்பன் அறக்கட்டளை சார்பில் மண்டகப்படி பூஜை நடைபெற்றது.காலை 8 மணியளவில் விநாயகர் தேரை பக்தர்கள் முதலில் வடம் பிடித்து இழுத்தனர். அதைத்தொடர்ந்து 8.15 மணிக்கு சுப்பிரமணியர் தேர் இழுக்கப்பட்டது.

பின்னர் காலை 8.30 மணிக்கு மூலவர் நடராஜர் தேரை அங்கு திரண்டிருந்த ஆயிரகணக்கான பக்தர்கள் வடம்பிடித்து இழுத்தனர். பின்னர் 8.45 மணிக்கு சிவகாமசுந்தரி அம்பாள் மற்றும் 9.10 மணிக்கு சண்டிகேஸ்வரர் தேரையும் பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்.

தேரோடும் வீதிகளில் பக்தர்கள் வெள்ளத்தில் 5 தேர்களும் அசைந்தாடி வந்தது.

இதையடுத்து இரவு 8 மணி அளவில் தேர்கள் அனைத்தும் நிலையை வந்தடைந்தது. பின்னர் ஆயிரங்கால் முகப்பு மண்டபத்தில் சுவாமி எழுந்தருளினார்.

பின்னர், அங்கு லட்சார்ச்சனை நடைபெற்றது. விழாவை முன்னிட்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மேற்பார்வையில் 500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

ஆனி திருமஞ்சன மகா தரிசன நாளான இன்று(திங்கட்கிழமை) அதிகாலையில் மூலவர் ஆனந்தநடராஜருக்கு மகா அபிஷேகம் நடைபெறுகிறது. பின்னர், காலை 10 மணிக்கு ரகசிய பூஜை நடக்கிறது.

இதையடுத்து, மதியம் 2 மணிக்கு மேல் மகா தரிசன நிகழ்ச்சி நடைபெற உள்ளது. நாளை (செவ்வாய்க்கிழமை ) பஞ்சமூர்த்திகள் முத்துப்பல்லக்கில் வீதிஉலா நடக்கிறது. 
Tags:    

Similar News