செய்திகள்
கோப்புப்படம்

திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.7¼ லட்சம் மோசடி

Published On 2020-11-22 17:55 GMT   |   Update On 2020-11-22 17:55 GMT
திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறி 7 பேரிடம் ரூ.7¼ லட்சத்தை மோசடி செய்த நபர் மீது சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டது.
வேலூர்:

வேலூர் மாவட்டம் காட்பாடி வண்டறந்தாங்கல் பகுதியை சேர்ந்தவர் கார்த்திகேயன் (வயது 44). இவர் வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் மனு ஒன்று அளித்தார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:-

எனது நண்பர் ஒருவர் தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த ஒருவர் அமைச்சர்கள் பலரிடம் தொடர்பில் இருப்பதாக கூறி அவரை அறிமுகம் செய்து வைத்தார்.

அந்த நபர் எனக்கு திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறினார். அதற்கு ரூ.1 லட்சத்து 30 ஆயிரம் முன்பணம் வேண்டும் என்றார். அதை நம்பி நான் அவர் கேட்ட பணத்தை கொடுத்தேன்.

மேலும் அவர் உன் நண்பர்களுக்கும் வேலை வாங்கி தருவதாக கூறினார். அதனால் எனக்கு தெரிந்த 6 பேரை அறிமுகப்படுத்தி வைத்தேன். அவர்களிடமும் தலா ரூ.1 லட்சத்தை பெற்றுக் கொண்டார். எங்கள் 7 பேருக்கும் வேலை வாங்கி தருவதாக உறுதியளித்தார்.

ஆனால் அவர் எங்களுக்கு வேலையும் வாங்கித் தரவில்லை, வாங்கிய ரூ.7 லட்சத்து 30 ஆயிரம் பணத்தையும் திருப்பித்தரவில்லை. நாங்கள் அனைவரும் சாதாரண குடும்பத்தை சேர்ந்தவர்கள். பணத்தை திருப்பி கேட்டபோது அந்த நபர் சரிவர பதில் கூறவில்லை. பின்னர் தான் அவர் எங்களை ஏமாற்றியது தெரியவந்தது. எனவே நாங்கள் இழந்த பணத்தை மீட்டுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மனுவை பெற்றுக் கொண்ட போலீசார் இதுகுறித்து நடவடிக்கை எடுப்பதாக கூறினர்.
Tags:    

Similar News