செய்திகள்
மத்திய அமைச்சர் நிதின் கட்கரியை விஜய் வசந்த் சந்தித்த போது எடுத்த படம்.

மத்திய அமைச்சர்களுடன் குமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் சந்திப்பு

Published On 2021-07-30 10:30 GMT   |   Update On 2021-07-30 10:30 GMT
மத்திய நெடுஞ்சாலை துறை மற்றும் போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரியை சந்தித்த குமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் தொகுதிக்கு உட்பட்ட அவரது துறை சம்பந்தமான கோரிக்கைகளை முன் வைத்தார்.
பாராளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக புதுடெல்லி சென்றிருக்கும் குமரி  பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் அவர்கள் தொகுதி சம்பந்தமான கோரிக்கைகளை முன்வைத்து மத்திய அமைச்சர்களை சந்தித்தார்.

மத்திய மீன்வளத்துறை அமைச்சர் பர்சோத்தம் ரூபாலாவை சந்தித்த விஜய் வசந்த் குமரி மாவட்ட கடலோர கிராமங்களில் அடிக்கடி ஏற்படும் கடல் சீற்றம் மற்றும் பலத்த மழை காரணமாக மீனவ மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருவதை சுட்டிக்காட்டினார். சாகர்மாலா திட்டத்தின் கீழ் புதிதாக 22 இடங்களில் தூண்டில் வளைவுகள் அமைக்க திட்டமிட்டுள்ள நிலையில் அந்த திட்டத்தில் இன்னும் அதிகமான தூண்டில் வளைவு அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.


மேலும் நீரோடி முதல் ஆரோக்கியபுரம் வரையிலான பகுதியில் கூடுதல் மீன்பிடி இறங்கு தளம் அமைக்க வேண்டும். இது மீனவர்களின் எரிபொருள் செலவை குறைக்கும் என்றும் எடுத்துரைத்தார். இயற்கை சீற்றத்தின் போது கடலில் காணாமல்போகும் மீனவர்களை விரைவில் தேடி மீட்க குமரியில் ஒரு ஹெலிகாப்டர் இறங்கு தளம் அமைக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். ஆழ்கடல் மீன்பிடியில் ஈடுபடும் மீனவர்கள் பயன்படுத்தும் செயற்கைக்கோள் தொலைபேசிகள் விலை உயர்ந்துள்ளன. பிஎஸ்என்எல் நிறுவனம் அதற்கான கட்டணங்களை உயர்த்தி உள்ளது. இதனால் மீனவர்கள் தொலைபேசிகள் பயன்படுத்த ரூபாய் 15,000 செலுத்த வேண்டிய நிலை உள்ளது. மீனவர்களுக்கு இந்த தொலைபேசிகளுக்கு சிறப்பு கட்டணம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை மனுவில் தெரிவித்தார். மீனவர்களுக்காக ஒரு சிறப்பு குழு காப்பீடு திட்டம் உருவாக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

மத்திய நெடுஞ்சாலை துறை மற்றும் போக்குவரத்து துறை அமைச்சர்  நிதின் கட்கரி அவர்களை சந்தித்து கன்னியாகுமரி தொகுதிக்கு உட்பட்ட அவரது துறை சம்பந்தமான கோரிக்கைகளை முன் வைத்தார்.

களியக்காவிளை-நாகர்கோவில்- காவல்கிணறு நான்கு வழிச்சாலை பணிகள் துரிதப்படுத்த வேண்டினார்.  மேலும் மார்த்தாண்டம் மேம்பாலத்திற்கு கீழே செல்லும் சாலை அதிகமாக சேதமடைந்து இருப்பதை சுட்டிக்காட்டி அதை விரைவில் சீர் செய்ய கேட்டுக்கொண்டார். அது போன்று களியக்காவிளை-நாகர்கோவில் நெடுஞ்சாலை குண்டும் குழியுமாக பயணிகளுக்கு மிக சிரமத்தை கொடுப்பதை எடுத்துக்கூறி இவை அனைத்துக்கும் விரைவில் தீர்வு காண வேண்டுமென்று கோரிக்கை வைத்தார்.
Tags:    

Similar News