செய்திகள்
கோப்புபடம்

போராட்டத்தில் ஈடுபட்ட பா.ஜ.க. நிர்வாகிகள் 55 பேர் மீது வழக்கு

Published On 2021-05-07 15:15 GMT   |   Update On 2021-05-07 15:15 GMT
திருவள்ளூர் அருகே போராட்டத்தில் ஈடுபட்ட பா.ஜ.க. நிர்வாகிகள் 55 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
திருவள்ளூர்:

மேற்கு வங்க மாநிலம் நந்திகிராமம் தொகுதியில் நடைபெற்ற வன்முறை சம்பவத்தை கண்டித்து திருவள்ளூரை அடுத்த மணவாளநகர் சந்திப்பு பகுதியில் நேற்று முன்தினம் பா.ஜ.க. திருவள்ளூர் மாவட்ட தலைவர் ராஜ்குமார் தலைமையில் அனுமதி பெறாமல் கட்சி நிர்வாகிகளுடன் சேர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டார்.

இதனால் அந்த வழியாக சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து மணவாளநகர் சப்-இன்ஸ்பெக்டர் நடராஜன் அனுமதியின்றி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பா.ஜ.க. திருவள்ளூர் மாவட்ட தலைவர் ராஜ்குமார் உள்ளிட்ட 15 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

அதேபோல திருவள்ளூர் எம்.ஜி.ஆர் சிலை அருகே நேற்று முன்தினம் பா.ஜ.க. திருவள்ளூர் நகர செயலாளர் சதீஷ்குமார் தலைமையில் பா.ஜ.க நிர்வாகிகள் கொரோனா தொற்று பரவும் வகையில் எந்த ஒரு முன் அனுமதியும் பெறாமல் போராட்டத்தில் ஈடுபட்டார்.

இதைத்தொடர்ந்து அனுமதி இல்லாமல் போராட்டத்தில் ஈடுபட்ட பா.ஜ.க நிர்வாகிகள் 18 பேர் மீது திருவள்ளூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

திருவள்ளூரை அடுத்த பூண்டி வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு நேற்றுமுன்தினம் பூண்டி ஒன்றிய செயலாளர் பாண்டுரங்கன் தலைமையில் கட்சி நிர்வாகிகள் 22 பேர் எந்த அனுமதியும் பெறாமல் கொரோனா தொற்று காலத்தில் ஒன்றுகூடி மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜியை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பினார்கள்.

இது குறித்து புல்லரம்பாக்கம் போலீசார் பா.ஜ.க நிர்வாகிகள் 22 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Tags:    

Similar News