செய்திகள்
தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தை அவரது இல்லத்தில் அதிமுக நிர்வாகிகள் சந்தித்து பேசினர்.

தே.மு.தி.க.வுடன் கூட்டணி பேச்சு- விஜயகாந்துடன் அ.தி.மு.க. நிர்வாகிகள் சந்திப்பு

Published On 2021-02-28 03:02 GMT   |   Update On 2021-02-28 03:04 GMT
பா.ம.க. உடன் கூட்டணியை உறுதி செய்த கையோடு, அ.தி.மு.க. நிர்வாகிகள் விஜயகாந்தை அவருடைய இல்லத்தில் சந்தித்து பேசினர்.
சென்னை:

தமிழக சட்டசபை தேர்தல் ஏப்ரல் மாதம் 6-ந்தேதி நடைபெறுகிறது. அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க.வுக்கு 23 சட்டமன்ற தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

சட்டமன்ற தேர்தலையொட்டி தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை தொடங்க வேண்டும் என்று கடந்த மாதத்தில் இருந்தே தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா வலியுறுத்தி வந்தார். ஆனால் அ.தி.மு.க. அதற்கு செவிசாய்க்கவில்லை. இதனால் சட்டமன்ற தேர்தலில் தே.மு.தி.க. தனித்து போட்டியிடும் என்று அரசியல் நோக்கர்கள் கருதினர்.

பா.ம.க. உடன் கூட்டணியை உறுதி செய்த கையோடு, அ.தி.மு.க. துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி, அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, தங்கமணி ஆகியோர் தே.மு.தி.க. நிறுவன தலைவர் விஜயகாந்த்தை சென்னை சாலிகிராமத்தில் உள்ள அவருடைய இல்லத்தில் சந்தித்தனர். இரவு 8 மணி முதல் 8.30 மணி வரையிலும் இந்த சந்திப்பு நடந்தது.

அப்போது, அ.தி.மு.க-தே.மு.தி.க. இரு தரப்பினரும் இன்று (ஞாயிற்றுக்கிழமை) கலந்து ஆலோசித்து, தொகுதி பங்கீட்டை உறுதி செய்வது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது. இதற்கு தே.மு.தி.க. தரப்பில் இருந்து ஒப்புக்கொண்டதாக தெரிகிறது. தொகுதி பங்கீட்டில் உடன்பாடு எட்டும் பட்சத்தில் அ.தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. அங்கம் வகிக்கும்.

கடந்த 2011-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. தேர்தலை சந்தித்தது. இதையடுத்து மோதல் காரணமாக அ.தி.மு.க. கூட்டணியில் இருந்து வெளியேறியது. 2016-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் கட்சி, த.மா.கா., கம்யூனிஸ்டு கட்சிகள் இணைந்து மக்கள் நல கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொண்டன.

இந்த கூட்டணியில் விஜயகாந்த் முதல்-அமைச்சர் வேட்பாளராக முன்மொழியப்பட்டார். ஒரு இடங்களில் கூட இந்த கூட்டணி வெற்றி பெறவில்லை.
Tags:    

Similar News