செய்திகள்
டி.கே.சிவக்குமார்

முன்னாள் கவுன்சிலர் கைது குறித்து கருத்து கூற டி.கே.சிவக்குமார் மறுப்பு

Published On 2020-12-05 02:04 GMT   |   Update On 2020-12-05 02:04 GMT
டி.ஜே.ஹள்ளி கலவர வழக்கில் முன்னாள் கவுன்சிலர் கைது செய்யப்பட்டது குறித்து கருத்து கூற டி.கே.சிவக்குமார் மறுத்துள்ளார்.
பெங்களூரு:

பெங்களூரு டி.ஜே.ஹள்ளி கலவர வழக்கில் முன்னாள் மேயர் சம்பத்ராஜை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் கவுன்சிலர் ஜாகீரை போலீசார் கைது செய்துள்ளனர். இதுகுறித்து மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

கிராம பஞ்சாயத்து தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இதை எதிர்கொள்ள காங்கிரஸ் தீவிரமாக தயாராகி வருகிறது. எங்கள் கொள்கை அடிப்படையில் கட்சியை கட்டமைக்கும் பணிகளை மேற்கொண்டுள்ளோம். கிராம பஞ்சாயத்து தேர்தலை நடத்த உத்தரவிட கோரி கர்நாடக ஐகோர்ட்டில் நாங்கள் மனு தாக்கல் செய்தோம். இந்த வழக்கில் தேர்தலை நடத்தும்படி மாநில தேர்தல் ஆணையத்திற்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

கிராம பஞ்சாயத்து தேர்தலில் கட்சி சின்னங்கள் பயன்படுத்தப்படுவது இல்லை. ஆயினும் எங்கள் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு உரிய கட்டளையை பிறப்பிப்போம். எங்கள் கட்சியின் மேலிட பொறுப்பாளர் ரன்தீப்சிங் சுர்ஜேவாலா நாளை(இன்று) கர்நாடகம் வருகிறார். அவர் கட்சி நிர்வாகிகளுடன் கிராம பஞ்சாயத்து தேர்தல் குறித்து ஆலோசனை நடத்துகிறார். பெங்களூரு டி.ஜே.ஹள்ளி கலவர வழக்கில் எங்கள் கட்சியை சேர்ந்த ஜாகீரை போலீசார் கைது செய்துள்ளனர். இதுகுறித்து நான் கருத்துக்கூற விரும்பவில்லை.

இவ்வாறு டி.கே.சிவக்குமார் கூறினார்.

டி.ஜே.ஹள்ளி கலவர வழக்கில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் கவுன்சிலர் கைது செய்யப்பட்டுள்ளது குறித்து அக்கட்சியின் மாநில தலைவர் டி.கே.சிவக்குமார் கருத்துக்கூற மறுத்துவிட்டதை பலரும் விமர்சித்து வருகிறார்கள்.
Tags:    

Similar News