லைஃப்ஸ்டைல்
பிள்ளைகள் நல்லவர்களாக வளர நம்பிக்கை வைப்போம்

பிள்ளைகள் நல்லவர்களாக வளர நம்பிக்கை வைப்போம்

Published On 2020-08-27 05:03 GMT   |   Update On 2020-08-27 05:03 GMT
நமது பிள்ளைகள் திறமையானவர்களாக, நல்லவர்களாக உருவாகுவார்கள் என்று முதலில் நாம் உறுதியாக நம்ப வேண்டும். அவர்களை நாம் குற்றம் சாட்டுவதை தவிர்த்து, அவர்களிடம் எதை எதிர்பார்க்கிறோம் என்பதை தெளிவுபடுத்த வேண்டும்.
இன்றைய இளம் தலைமுறையினருக்கு நல்லதை தெரிந்து கொள்ள நான்கு வழிகள் இருக்கிறது என்றால், கெட்டதை அறிந்து கொள்ள ஆயிரம் வழிகள் கிடைக்கின்றன. இதற்கு மத்தியில்தான் திறமையான இளைஞர்கள் உருவாக வேண்டியதிருக்கிறது. ஆகவே அவர்களை நாம் குற்றம் சாட்டுவதை தவிர்த்து, அவர்களிடம் எதை எதிர்பார்க்கிறோம் என்பதை தெளிவுபடுத்த வேண்டும். நமது பிள்ளைகள் திறமையானவர்களாக, நல்லவர்களாக உருவாகுவார்கள் என்று முதலில் நாம் உறுதியாக நம்ப வேண்டும்.

பள்ளி ஒன்றிற்கு சென்றிருந்தபோது, ஒரு மாணவியின் கைவினைப் பொருள் தயாரிப்பை பார்த்து பாராட்டினேன்.

அப்பொழுது அவள் என்னிடம் மிக நெருக்கமாக வந்து, “என்னை உங்களுக்கு பிடிக்குமா ஆன்டி?” என்று கேட்டாள்.

“ஆமாம் செல்லம்.. உன்னை எனக்கு ரொம்ப பிடிக்கும்டா” என்று நான் கூறியவுடன், அவள் அழ ஆரம்பித்து விட்டாள்.

“ஏன் அழுகிறாய்?” என்று கேட்டவுடன் “நான் படிப்பதெல்லாம் மறந்து போய் பரீட்சையில் பெயில் ஆகி விடுகிறேன். மிஸ் திட்டுறாங்க, யாரும் என்னோட பேச மாட்டேங் கிறாங்க.. என்னை யாருக்கும் பிடிக்கல..” என்று தொடர்ந்து அழ, அவளை அரவணைத்துக் கொண்டு “உன்னால் முடியும். நிச்சயமாக நீ நல்ல மார்க் வாங்குவாய்” என்று நான் சொன்னவுடன் அவள் முகத்தில் புன்னகை வெளிப்பட்டது.

வகுப்பு முடிந்ததும் அவள் ஆசிரியையை சந்தித்து “அவள் மனதில் உன்னால் முடியும் நிச்சயம் நீ வெல்வாய் என்று நம்பிக்கையை விதையுங்கள். அதையே அவள் பெற்றோரும் கூறும்படி சொல்லுங்கள்” என்றேன். அதன் பின்பு அவள் கல்வித்திறன் மேம்பட்டது. இதுதான் சரியான அணுகுமுறை.

பெற்றோர்கள் தம் பிள்ளைகள் மீது எந்த அளவு பாசம் வைத்துள்ளீர்களோ, அந்த அளவு கண்காணிப்பும் அவசியம். பிள்ளைகள் மேல் எந்த அளவு அன்பை காட்டுகின்றீர்களோ, அந்த அளவு கண்டிப்பும் தேவை. ஆனால் அது தண்டனையாக இல்லாமல், தான் செய்தது தவறு என்பதை அவர்கள் உணரும் வண்ணம் இருக்கவேண்டும்.

பெற்றோர்களாகிய நாம், பிள்ளைகளின் கல்வி, உடல்நலம், பொழுதுபோக்கு அம்சங்கள், ஏனைய திறமைகளை வளர்த்துக்கொள்ளுதல் போன்றவற்றில் காட்டும் அக்கறை போல பிள்ளைகளின் மன நலனில் அக்கறை செலுத்துவதில்லை. இந்த காரணத்தினால்தான் பெற்றோர்-பிள்ளைகள் இடையே கருத்து மோதல் பல வீடுகளில் ஏற்படுகிறது.

‘அந்த காலத்தில் நாங்க எப்படி இருந்தோம் தெரியுமா?’ என்று நம் பிள்ளைகளிடம், கேள்வி கேட்கும் முன் கொஞ்சம் யோசிப்போம். யோசித்தால் இன்று இவர்களின் மாற்றத்திற்கு நாமும் காரணம் என்பதை புரிந்துகொள்ளலாம்.

பிள்ளைகளுக்கு பெற்றோரின் அன்பு தேவை. அரவணைப்பு தேவை. பிள்ளைகளின் உணர்ச்சிகளைப் புரிந்துகொண்டு நடக்கவேண்டும். பிள்ளைகளுக்கு எதில் ஆர்வம் இருக்கிறது என்பதை தெரிந்து, அதை நிறைவேற்றிக் கொடுக்கவேண்டும். பிள்ளைகளிடம் சுய கட்டுப்பாட்டை வளர்க்கவேண்டும். முறையான முயற்சியுடன் திறமைகளைத் தானே முன்வந்து வளர்க்கும் ஆர்வத்தை தூண்ட வேண்டும். கொடுத்த வேலையை அதிக கண் காணிப்பு இன்றி நிறைவேற்றும் ஆற்றலை மேம்படுத்தவேண்டும். நல்ல மனப்பக்குவம், நல்லொழுக்கம், தலைமைப் பண்புகள், பண்பு நெறி எனும் சீரிய அம்சங்களில் பிள்ளைகளை ஜொலிக்கச் செய்யவேண்டும். அப்போதுதான் அவர்கள், தகுதியான நல்ல பிள்ளைகளாக, கவலை கொள்ள வேண்டிய அம்சங்கள் எதுவும் இல்லாதவர்களாக வளர்வார்கள்.

இன்றைய தாய்மார்களில் பெரும்பாலானவர்கள், தங்கள் மகள்களிடம் பேசுவதே தங்களுக்கு சவாலான விஷயமாக இருப்பதாக சொல்கிறார்கள். அதாவது மகள்கள் தங்களிடம் மனந்திறந்து பேசுவதில்லை என்று குறைபடுகிறார்கள். அவர்களுடன் பேசுவதற்கென்று தனி நேரம் எதுவும் ஒதுக்கவேண்டியதில்லை. அவர்கள் ஏதாவது செய்துகொண்டிருக்கும்போது, அவர்களுக்கு உதவி செய்ய ஆரம்பித்து, அந்த வேலையை செய்துகொண்டே அவர்களுடன் பேசலாம். பிள்ளைகளோடு சேர்ந்து வீட்டிலேயே சின்ன சின்ன வேலைகள் செய்யலாம், சேர்ந்து சாப்பிடலாம், அவர் களோடு விளையாடலாம். இப்படி அவர்களோடு நேரம் செலவிட்டால், பிள்ளைகளிடம் மனந்திறந்து பேச நிறைய வாய்ப்புகள் கிடைக்கும்.

தாய் பொறுமையாகக் கேட்டால்தான் பிள்ளைகள் மனந்திறந்து பேசுவார்கள். நாம் எப்போதும் பரபரப்பாக இயங்கிக்கொண்டிருந்தால், நம்மிடம் பேசத் தயங்குவார்கள். பிள்ளைகளிடம் நாம் நட்போடு பழகினால், வெளிப்படையாகப் பேசுவார்கள். ‘என்னை உன் நண்பன் மாதிரி நினைச்சுக்கோ, எதுவாக இருந்தாலும் சொல்லு’ என்று சொன்னால் மட்டும் போதாது. அதே உணர்வுடன் பழகவேண்டும். அவர்கள் சொல்லும் பிரச்சினைகளை அசட்டை செய்யாமல், அவர்களுடைய இடத்தில் நம்மை வைத்துப் பார்க்க வேண்டும். அதேபோல், பிள்ளைகள் விஷயத்தைச் சொல்லி முடிப்பதற்குள் உணர்ச்சிவசப்படாமல் பொறுமையாக காது கொடுத்து கேட்க வேண்டும்.

“என் அம்மாவிடம் எதை பத்தி வேண்டுமானாலும் தயங்காமல் பேசலாம். நான் பேசும்போது என் அப்பா குறுக்கே பேசமாட்டார். என்னை பத்தி தப்புக்கணக்கு போட மாட்டார். நான் பேசி முடிக்கிற வரைக்கும் அமைதியாக கேட்பார். அதுக்கப்புறம் எனக்கு தேவையான, நல்ல ஆலோசனைகளை கொடுப்பார்” என்று அவளது தோழியிடம், உங்கள் மகள் பேசும் அளவுக்கு நீங்கள் அவளிடம் நம்பிக்கையை பெறுங்கள்.

சில விஷயங்களைப் பற்றி மகள்களிடம் பேசும்போது, உதாரணமாக காதலிப்பதைப் பற்றிப் பேசும்போது அதிலிருக்கும் ஆபத்துகளைப் பற்றி மட்டும் சொல்லாமல் அவர்கள் சரியான தீர்மானம் எடுக்க உதவ வேண்டும். காதலிப்பதற்கு முன்னால் அந்த நபரை பற்றி முழுமையாக தெரிந்துகொள்ள என்ன செய்யவேண்டும்? சரியான நபரை தேர்ந்தெடுப்பது எப்படி? தற்போது காதல் தேவையா? உணர்ச்சிவசப்படாமல் முடிவெடுப்பது எப்படி? என்பதை எல்லாம் தெளிவாக உணர்த்தவேண்டும். ஒருவரின் புற அழகை விட அக அழகு முக்கியம், பொறுமை முக்கியம் என்பதை தோழமையுணர்வுடன் சொல்லவேண்டும். அப்படி சொல்லும்போது பிள்ளைகள் ‘நமக்கு யாரையாவது பிடித்திருந்தால், அதை அப்பா-அம்மாவிடம் மறைக்காமல் சொல்லவேண்டும்’ என்று கருதுவார்கள். ஒருவேளை யாரையாவது காதலித்தால்கூட பொறுமையாக காத்திருப்பார்களே தவிர தவறான முடிவு எடுக்க மாட்டார்கள்.

‘நம் பிள்ளைகள் மீது நம்பிக்கைவைப்போம். அவர்கள் நல்லவர்களாக வளர்வார்கள்’ என்பது நல்ல பண்பாடு. நல்ல பழக்கங்களை நமது குழந்தைகளுக்கு கற்றுக்கொடுப்பதைவிட, நாம் அவைகளை கடைப்பிடித்து அவர்களுக்கு முன்னுதாரணமாக இருக்கவேண்டும். எங்கோ இருக்கும் தலைவர்கள் நமது குழந்தை களுக்கு முன்மாதிரியில்லை. அவர்கள் முன்னால் வாழ்ந்துகாட்டும் நாமே அவர்களுக்கு முன்மாதிரியாவோம்.

-ஆ.ஆண்டனி ரோஸ்லின்,

தொழில் முனைவு மற்றும் மனிதவள ஆலோசகர், மதுரை.
Tags:    

Similar News