செய்திகள்
ரவிசாஸ்திரி

தாயகம் திரும்ப பயண சான்றிதழுக்காக காத்திருக்கும் ரவிசாஸ்திரி

Published On 2021-09-17 05:13 GMT   |   Update On 2021-09-17 05:13 GMT
ரவிசாஸ்திரி, பரத் அருண், ஸ்ரீதர் ஆகியோர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு நன்றாக உள்ளனர். தனிமைப்படுத்துதலில் இருந்தும் வெளியே வந்து விட்டனர்.
புதுடெல்லி:

இங்கிலாந்துக்கு எதிரான 4-வது டெஸ்ட் போட்டியின்போது இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ரவிசாஸ்திரி, உதவி பயிற்சியாளர்கள் பரத் அருண், ஆர்.ஸ்ரீதர் ஆகியோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டனர்.

லண்டனில் புத்தக வெளியீட்டு விழாவில் முககவசம் எதுவும் அணியாமல் கலந்து கொண்டதன் மூலம் இவர்கள் கொரோனா தொற்றுக்குள்ளானதாக கூறப்படுகிறது. அதைத் தொடர்ந்து இந்திய அணியின் பிசியோதெரபிஸ்ட் யோகேஷ் பார்மர் கொரோனாவில் சிக்கியதால் அவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்த இந்திய வீரர்கள் கலக்கமடைந்தனர். இதைத் தொடர்ந்து இந்தியா-இங்கிலாந்து இடையே மான்செஸ்டரில் நடக்க இருந்த 5-வது டெஸ்ட் ரத்தானது. இந்திய வீரர்கள் அனைவரும் அங்கிருந்து ஐ.பி.எல். போட்டி நடக்க உள்ள அமீரகம் சென்று விட்டனர்.

இதற்கிடையே இங்கிலாந்தில் 10 நாட்கள் தனிமைப்படுத்துதல் நடைமுறையை முடித்து விட்ட இந்திய பயிற்சி குழுவினர் எப்போது தாயகம் அனுப்பப்படுவார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது. ‘ரவிசாஸ்திரி, பரத் அருண், ஸ்ரீதர் ஆகியோர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு நன்றாக உள்ளனர். தனிமைப்படுத்துதலில் இருந்தும் வெளியே வந்து விட்டனர். ஆனால் அங்குள்ள சுகாதார நடைமுறைப்படி விமானத்தில் செல்வதற்கு சி.டி. ஸ்கேன் ஸ்கோர் 38-க்கு மேல்இருந்தால் (கொரோனாவால் ஒருவரது நுரையீரல் எந்த அளவுக்கு பாதிக்கப்பட்டு அதில் இருந்து தேறி இருக்கிறார் என்பதை சுட்டிகாட்டுவது) தான் விமான பயணத்துக்கு தகுதியுடன் இருக்கிறார் என்பதற்கான சான்றிதழ் கிடைக்கும். அந்த சான்றிதழுக்காக அவர்கள் காத்திருக்கிறார்கள். எல்லாம் சரியாக நகர்ந்தால் அடுத்த 2 நாட்களில் அவர்கள் தாயகம் திரும்புவார்கள் என்று எதிர்பார்க்கிறோம்’ என்று இந்திய கிரிக்கெட் வாரிய மூத்த நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.
Tags:    

Similar News