செய்திகள்
ஜோதிஸ்ரீ துர்கா

மருத்துவ சீட் கிடைக்காவிட்டால் அனைத்து முயற்சிகளும் வீணாகிவிடும்- தற்கொலை செய்த மாணவி எழுதிய உருக்கமான கடிதம்

Published On 2020-09-12 07:02 GMT   |   Update On 2020-09-12 07:02 GMT
‘நன்றாக படித்துள்ளேன், ஆனாலும் பயமாக இருக்கிறது’. மருத்துவ சீட் கிடைக்காவிட்டால் அனைத்து முயற்சிகளும் வீணாகிவிடும் என்று தற்கொலை செய்த மாணவி எழுதிய உருக்கமான கடிதத்தில் கூறியுள்ளார்.
மதுரை:

மதுரையில் நீட் அச்சத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்த ஜோதிஸ்ரீ துர்கா அறையில் 5 பக்கத்தில் ஆங்கிலத்தில் எழுதப்பட்ட கடிதத்தை போலீசார் கைப்பற்றி உள்ளனர்.

அந்த கடிதத்தில் மாணவி ஜோதிஸ்ரீ துர்கா எழுதி உள்ளதாவது:-

என்னை பாசமாக வளர்த்த அப்பா-அம்மாவுக்கும், ஊக்கப்படுத்திய ஆசிரியர்களுக்கும் வணக்கம்.

நீங்கள் என்னை பெரிய ஆளாக மாற்ற முயற்சி செய்கிறீர்கள். அது உங்கள் தவறு அல்ல. உங்களையும் நான் குறை சொல்லவில்லை. அப்பா-அம்மாவை நேசிப்பதுபோல நண்பர்களையும் அதிகமாக நேசிக்கிறேன்.

எனக்கு நல்ல வழிகாட்டியாக இருந்த அப்பாவும், என் மீது அதிக அன்பு காட்டிய அம்மாவும் என்னை மன்னித்து விடுங்கள். நீங்கள் என் மீது அதிக எதிர்பார்ப்பை வைத்திருக்கிறீர்கள்.

நானும் நீட் தேர்விற்கு நன்றாக தயார் செய்து இருக்கிறேன். ஆனாலும் பயமாக இருக்கிறது. ஒருவேளை மருத்துவக் கல்லூரியில் எனக்கு இடம் கிடைக்காவிட்டால் நாம் அனைவரும் எடுத்த முயற்சிகள் வீணாகிவிடும்.

எனவே என்னை அனைவரும் மன்னித்து விடுங்கள். அன்புள்ள அப்பா அறிவது, நீங்கள் இதய நோயாளி. அதனால் மனம் கலங்காதீர்கள். உங்கள் உடல்நலத்தை நன்றாக பார்த்துக் கொள்ளுங்கள். இரவு நீண்ட நேரம் பயணம் செய்வதை தவிர்த்து விடுங்கள்.

எப்பவும் எனக்கு நீங்கள் தேர்வு செய்த ஆடைகள்தான் ரொம்ப பொருத்தமாக இருக்கும். அதை எப்போதும் நினைத்து பெருமை கொள்வேன். உங்கள் உடல்நிலையை பேணுங்கள்.

தம்பி ஸ்ரீதரை நன்றாக பார்த்துக் கொள்ளுங்கள். உலகத்திலேயே நீங்கள் தான் சிறந்த தந்தை.

எனவே உங்கள் உடல் நிலையை அதிக அக்கறை எடுத்து செயல்படுங்கள். இரவில் நீண்ட நேரம் செல்போன் பார்ப்பதை தவிர்த்து விடுங்கள். மறக்காமல் மருத்துவ பரிசோதனை செய்து கொள்ளுங்கள். எப்பவும்போல நீங்கள் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்பது தான் எனது விருப்பம். எனது தங்க சங்கிலியை நீங்கள் அணிந்து கொள்ளுங்கள்.

நான் உங்களிடம் நிறைய சொல்ல வேண்டும் என நினைத்தேன். ஆனாலும் நேரம் இல்லை. தம்பி ஸ்ரீதர் உன்னை நான் அதிகம் நேசிக்கிறேன். ஆனால் நான் உன்னை இழந்து விட்டேன். அதற்காக நீ என்னை மன்னித்து விடு.

அப்பா, அம்மா மீது பாசமாக நடந்து கொள். அவர்களை நன்றாக பார்த்துக்கொள். அவர்களுக்கு நீ மட்டும்தான் இருக்கிறாய். எனவே கவலைப்படாதே. நீ கவலைப்பட்டால் அப்பா, அம்மாவும் சோகமாகி விடுவார்கள்.

நீயும் பெரியவனாகி உயர்கல்வி படிக்க போகிறாய். நன்றாக படி. ரொம்ப நேரம் செல்போனில் கேம் விளையாடாதே. அப்படி கேம் விளையாடினால் அதற்கு அடிமையாகி விடுவாய். அப்பாவும், அம்மாவும் உன்னை தான் நம்பி இருக்கிறார்கள். எனவே அவர்களை ஏமாற்றி விடாதே. எப்போதும் மகிழ்ச்சியாக இரு. எனது இந்த முடிவுக்கு எனது பெற்றோரும், உறவினர்களும் கலங்க வேண்டாம்.

இந்த கடிதத்தை நான் எழுதி வைத்துள்ளேன். கடிதத்தை பார்த்தவர்கள் எனது பெற்றோரிடம் கொடுக்கவும்.

இவ்வாறு மாணவி ஜோதிஸ்ரீ துர்கா உருக்கமாக எழுதி உள்ளார்.

மேலும் தனது தோழிகள் மற்றும் உறவினர்கள் பெயர்களையும் குறிப்பிட்டு அவர்களிடமும் மனம் வருந்த வேண்டாம் என்று அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

கடைசியில் இதுதொடர்பாக செல்போனில் ரெக்கார்டு செய்த வீடியோ இருப்பதாகவும் அந்த செல்போன் பீரோவுக்கு மேல் உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

கடிதத்தை கைப்பற்றிய போலீசார் செல்போனையும் கைப்பற்றி அதில் உள்ள வீடியோ மற்றும் ஆடியோ பதிவுகளை ஆய்வு செய்து வருகிறார்கள்.
Tags:    

Similar News