ஆன்மிகம்
வலியபடுக்கை பூஜையையொட்டி பக்தர்கள் சாமி தரிசனம் செய்ததை படத்தில் காணலாம்.

மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் உணவு பதார்த்தங்கள் படைத்து வழிபாடு

Published On 2020-12-12 05:35 GMT   |   Update On 2020-12-12 05:35 GMT
மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் உணவு பதார்த்தங்கள் படைத்து வலிய படுக்கை பூஜை நடந்தது. அப்போது அம்மன் சிறப்பு மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
குமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோவில்களில் மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலும் ஒன்று. இந்த கோவிலில் நடைபெறும் முக்கிய விழாக்களில் வலிய படுக்கை என்ற மகா பூஜை சிறப்பு வாய்ந்ததாக கருதப்படும். மாசி திருவிழாவின் 6-ம் நாள், பங்குனி மாத பரணி நட்சத்திரம் மற்றும் கார்த்திகை மாத கடைசி வெள்ளிக்கிழமை என வருடத்தில் 3 முறை மட்டுமே நடைபெறும்.

அதன்படி கார்த்திகை மாத கடைசி வெள்ளிக்கிழமையான நேற்று அதிகாலை 4.30 மணிக்கு நடை திறக்கப்பட்டது. பின்னர் 5.30 மணிக்கு பஞ்சாபிஷேகம், 6.30 மணிக்கு உஷ பூஜை, நண்பகல் 12 மணிக்கு உச்ச பூஜை, மாலை 6.30 மணிக்கு அலங்கார தீபாராதனை, வில்லிசை, இரவு 8.30 மணிக்கு அத்தாழ பூஜை, 10 மணிக்கு அம்மன் வெள்ளி பல்லக்கில் கோவில் வளாகத்தில் பவனி வரும் நிகழ்ச்சியும் நடந்தது.

இதனை தொடர்ந்து வலிய படுக்கை என்னும் மகா பூஜை நடைபெற்றது.

இந்த பூஜையில் அம்மனுக்கு அவல், பொரி, கற்கண்டு, முந்திரி, சர்க்கரை, பச்சரிசி, தேங்காய், பழவகைகள், இளநீர், பாயாசம், கரும்பு, அப்பம் போன்ற உணவு பதார்த்தங்கள் அம்மனுக்கு படைக்கப்பட்டது. அப்போது அம்மன் சிறப்பு மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
Tags:    

Similar News