செய்திகள்
பலியான தியாவின் தாயாரை போலீசார் விசாரணைக்கு அழைத்துச் சென்ற காட்சி.

கேரளாவில் சாப்பிட மறுத்ததால் தாயார் தாக்கியதில் சிறுமி பலி

Published On 2019-10-08 05:36 GMT   |   Update On 2019-10-08 05:36 GMT
கேரளாவில் உணவு சாப்பிட மறுத்த 4 வயது சிறுமி தாயார் தாக்கியதில் பரிதாபமாக உயிரிழந்தது. இது தொடர்பாக சிறுமியின் தாயாரை போலீசார் கைது செய்தனர்.
திருவனந்தபுரம்:

கேரள மாநிலம் கொல்லத்தை அடுத்த பெரிய பள்ளியை சேர்ந்தவர் தீபு. இவரது மனைவி திவ்யா.

தீபு-திவ்யா தம்பதியின் மகள் தியா.4 வயதே ஆகிறது. தியாவை அவரது பெற்றோர் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு பெரிய பள்ளியில் உள்ள மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். குழந்தைக்கு காய்ச்சல் ஏற்பட்டு அவதிப்படுவதாகவும், ரத்த வாந்தி எடுப்பதாகவும் கூறி சிகிச்சைக்கு அனுமதித்தனர்.

குழந்தையை பரிசோதித்த டாக்டர்கள், குழந்தையின் உடல் நிலை மிகவும் மோசமாக இருந்ததால், மேல் சிகிச்சைக்காக திருவனந்தபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியிலேயே குழந்தை தியா பரிதாபமாக இறந்தது. இதையடுத்து திருவனந்தபுரம் அரசு ஆஸ்பத்திரியில் குழந்தையின் உடலை டாக்டர்கள் பரிசோதித்து பார்த்தனர். அப்போது குழந்தையின் உடலில் காயங்கள் இருப்பதும், மூளையில் ரத்தம் உறைந்திருப்பதையும் கண்டனர்.

இதையடுத்து டாக்டர்கள், போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் விரைந்து சென்று குழந்தையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் குழந்தை தியாவின் பெற்றோர் தீபு- திவ்யா இருவரையும் பிடித்து விசாரித்தனர்.

போலீசாரிடம் திவ்யா கூறும்போது, கடந்த சில வாரங்களுக்கு முன்பே குழந்தை தியாவுக்கு காய்ச்சல் இருந்தது. இதற்காக ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றேன். அங்கு சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய குழந்தைக்கு மாத்திரை கொடுக்கும் முன்பு உணவு உண்ண கூறினேன். ஆனால் குழந்தை உணவு உண்ண மறுத்தது.

இதில் ஆத்திரம் அடைந்து குழந்தையை தாக்கினேன். அடி தாங்காமல் குழந்தை மயங்கி விழுந்தது. உடனே ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றோம், என போலீசாரிடம் தெரிவித்தார்.

இது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். டாக்டர்களின் பிரேத பரிசோதனை அறிக்கை கிடைத்த பின்பே, குழந்தை எப்படி இறந்தார் என்பது தெரியவரும். அதன்பின்பு மேல் நடவடிக்கை எடுக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.
Tags:    

Similar News