செய்திகள்
ரஜினிகாந்த்

ரஜினிகாந்த் தமிழக முதல்வராக வருவார் - அர்ஜூன் சம்பத்

Published On 2020-02-11 07:19 GMT   |   Update On 2020-02-11 07:19 GMT
ஆன்மீக கொள்கை உடைய ரஜினிகாந்த் தமிழக முதல்வராக வருவார் என இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் தெரிவித்துள்ளார்.
தஞ்சாவூர்:

தஞ்சை பெரிய கோவிலுக்கு இன்று வந்திருந்த இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் அங்கு சாமி தரிசனம் செய்தார். அதன் பின்னர் நிருபர்களுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

தஞ்சை பெரிய கோவில் குடமுழுக்கு சிறப்பாக நடைபெற்றது. இதற்காக சிறப்பாக ஏற்பாடுகளை செய்த கலெக்டர் மற்றும் அனைத்து துறை அதிகாரிகளுக்கு பாராட்டுகளை தெரிவித்து கொள்கிறேன்.

சிவபெருமானையும், சிவலிங்கத்தையும் அசிங்கமாக பேசிய சீமானை பெரிய கோவிலுக்குள் அனுமதித்தது தவறு. மேலும் அவருக்கு மரியாதை அளித்ததும் தவறானதாகும்.

ரஜினியையும், விஜயையும் இணைத்து பேசக்கூடாது. வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது ரஜினி வீட்டில் வருமானவரித்துறை சோதனை நடைபெற்றது. சில ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. வருமானவரித்துறையே ரஜினிக்கு நற்சான்றிதழ் வழங்கி இருக்கிறது. ஆனால் விஜய் வரி ஏய்ப்பு செய்துள்ளார். அதன் காரணமாகவே வருமானவரி சோதனை நடைபெற்றுள்ளது. தனது படத்தின் மூலம் வரக்கூடிய வருமானம் மற்றும் ரசிகர்கள் மூலமாக கிறிஸ்தவ மதத்தை பரப்புகிறார்.

வரும் 14-ந் தேதி காதலர் தினத்தன்று பெரிய கோவில் மட்டுமில்லாமல் வேறு எந்த கோவிலுக்குள்ளும் காதலர்களை அனுமதிக்க கூடாது. அதேப்போல் பொது இடங்களிலும் காதலர் தின கொண்டாட்டத்தை அனுமதிக்ககூடாது.

16-ந் தேதி தஞ்சையில் இந்து மக்கள் கட்சி சார்பில் மாநாடு நடைபெறுகிறது. ஆன்மீக கொள்கை கொண்ட கட்சிகளை இணைக்கும் செயலில் இந்து மக்கள் கட்சி ஈடுபடும். ஆன்மீக சிந்தனை கொண்ட ரஜினிகாந்த் தமிழக முதலமைச்சராக வருவார்.



பெரிய கோவில் குடமுழுக்கு பிறகு நல்ல வி‌ஷயங்கள் நடந்து வருகிறது. காவிரி டெல்டா மாவட்டங்கள் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக மாற்றப்படும் என முதலமைச்சர் அறிவித்துள்ளார். காவிரி- கோதாவரி இணைப்பு திட்டத்துக்கு 6 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கி உள்ளார். பிரதமர் நரேந்திர மோடி இலங்கையில் 13-வது சட்டபிரிவை அமல்படுத்த வேண்டுமென்று ராஜபக்சேவிடம் வலியுறுத்தி உள்ளார். இப்படி பல்வேறு நல்ல வி‌ஷயங்கள் நடந்துள்ளது.

டெல்லி சட்டசபை தேர்தலில் ஆம்ஆத்மி கட்சி வெற்றி பெற்றதற்கு வாழ்த்துக்கள். அரவிந்த் கெஜ்ரிவால் பதவியேற்புக்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் செல்வார். ஆனால் அவரால் முதல்வராக முடியாது.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News