செய்திகள்
கோப்புபடம்

மேம்பாட்டு பணிகள் முடிந்து அழகாக காட்சியளிக்கும் அமராவதி முதலைப்பண்ணை

Published On 2021-07-15 10:04 GMT   |   Update On 2021-07-15 12:15 GMT
முதலைகள் வசிக்கும் தொட்டிகள் பராமரிக்கப்பட்டு பெரிய அளவிலான முதலைகள் வட்ட வடிவமாக உள்ள தொட்டியில் விடப்பட்டுள்ளது.
உடுமலை:

உடுமலை அருகே மேற்கு தொடர்ச்சிமலைப்பகுதியில் ஆனைமலை புலிகள் காப்பக வனப்பகுதி, அமராவதி அணை, அணைப்பூங்கா, பசுமை சூழ்ந்த வயல்வெளிகள் என சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் அமராவதி சுற்றுலா தலம் உள்ளது.

இங்கு வனத்துறை சார்பில் 1976ல் தொடங்கப்பட்ட ஆசியாவிலேயே சிறப்பு வாய்ந்த நன்னீர் முதலைகள் வசிக்கும் முதலைப்பண்ணை உள்ளது. இது 12 ஏக்கர் பரப்பளவில் அமைந்து 8 தொட்டிகளில் சிறிய குட்டிகள் முதல் பெரியது வரை 98 முதலைகள் உள்ளது. 

இப்பண்ணை முறையான பராமரிப்பு இல்லாமல் காணப்பட்டது. தற்போது இப்பண்ணையில் பயணிகளை கவரும் வகையில் பல்வேறு மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

முதலைகள் வசிக்கும் தொட்டிகள் பராமரிக்கப்பட்டு பெரிய அளவிலான முதலைகள் வட்ட வடிவமாக உள்ள தொட்டியில் விடப்பட்டுள்ளது. அனைத்து முதலைகளையும் முழுமையாகவும் ஆபத்து ஏற்படாத வகையில் சுற்றுலா பயணிகள் ரசிக்கும் வகையில் கம்பி வேலி அமைக்கப்பட்டுள்ளது.

முதலைகளின் வகைகள், நன்னீர் முதலைகளின் இயல்புகள், முதலை முட்டையிடுவது ,முதல் வளர் பருவம், முதலைகளின் வாழ்வியல் உள்ளிட்ட அனைத்து தகவல்களும் இடம் பெறும் வகையில் விளக்கப்பலகைகள் வைக்கப்பட்டுள்ளன.

அரிய வகை தாவரங்கள், மரங்கள் அமைக்கப்பட்டு அவை குறித்த விவரங்களும் இடம் பெற்றுள்ளன. இங்கு சிறிய அளவில் உள்ள நீர் செல்லும் கால்வாய் மீது இரு இடங்களில் அழகான வடிவமைப்பில் பாலம் மற்றும் புல்தரை மைதானம், அழகான நடை பாதை, இயற்கை சூழலில் வித்தியாசமாக அமைக்கப்பட்டுள்ள இருக்கைகள் என சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் பண்ணை அழகுபடுத்தப்பட்டுள்ளது.

மேலும் வனம், வன விலங்குகளை காப்பதன் அவசியம் குறித்து விளக்கும் வகையில் சிறுத்தை, யானை, முதலை, குரங்கு என பல்வேறு வன விலங்குகளின் உருவங்கள் தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

புதிதாக சிறுவர்களை கவரும் வகையில் பல்வேறு விளையாட்டு உபகரணங்களுடன் சிறுவர் பூங்காவும் அமைக்கப்பட்டுள்ளது. இப்பண்ணை அருகில் வசிக்கும் கரட்டுப்பதி மலைவாழ் மக்கள் வாழ்வாதாரம் மேம்படுத்தும் வகையிலும் சுற்றுலா பயணிகளுக்கு வனத்தில் மலைவாழ் மக்கள் சேகரிக்கும் பொருட்கள், கலைப்பொருட்கள், அம்மக்கள் உற்பத்தி செய்யும் பொருட்கள் விற்பனை செய்யும் ‘எகோ ஷாப்’ அமைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து வனத்துறையினர் கூறியதாவது:-

சுற்றுலா பயணிகளை கவரும் வகையிலும் வனம், வன விலங்குகளை காப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் அமராவதி முதலைப்பண்ணை மேம்படுத்தப்பட்டுள்ளது.

சிற்ப கலை நிபுணர்கள் வாயிலாக வன விலங்கு பொம்மைகள், அலங்கார வளைவு, சிறுவர் பூங்கா, பசுமை புல்தரை, நடைபாதை என பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கொரோனா ஊரடங்கு காலத்தில் முழுமையான பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு தயார் நிலையில் உள்ளது. அரசு அனுமதி கிடைத்ததும் சுற்றுலா பயணிகள் பார்வைக்கு திறந்து விடப்படும் என்றனர்.
Tags:    

Similar News