செய்திகள்

மாணவர்களை ஏமாற்றி போலி பயிற்சியாளர் மோசடி - ரூ.2½ கோடி வசூலித்தது அம்பலம்

Published On 2018-07-14 06:40 GMT   |   Update On 2018-07-14 06:42 GMT
கடந்த 6 ஆண்டுகளில் போலி பயிற்சியாளர் 5 லட்சம் மாணவர்களை ஏமாற்றி ரூ.2½ கோடி வசூலித்து இருப்பது தெரியவந்துள்ளது. #CoimbatoreStudent #Logeshwari

கோவை:

கோவையை அடுத்த தொண்டாமுத்தூர் நரசிபுரம் கல்லூரியில் நேற்றுமுன்தினம் நடந்த பேரிடர் மேலாண்மை பயிற்சியின்போது மாணவி லோகேஸ்வரி பலியான சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

பயிற்சியாளர் ஆறுமுகம் கல்லூரியின் 2-வது மாடியில் இருந்து என்.எஸ்.எஸ். மாணவ-மாணவிகள் ஒவ்வொருவராக கீழே வலையில் குதிக்க செய்தார்.

அப்போது மாணவி லோகேஸ்வரி பயத்தில் குதிக்க மறுத்தார். அவரை பயிற்சியாளர் கட்டாயப்படுத்தி கீழே தள்ளி விட்டார். இதில் நிலைகுலைந்து கீழே விழுந்த மாணவி லோகேஸ்வரி முதல் மாடியில் இருந்த ‘‌ஷன்ஷேடு’ சிலாப்பில் தலை மோதி பரிதாபமாக உயிர் இழந்தார்.

மாணவ-மாணவிகள் கண் எதிரில் நடந்த இந்த சம்பவத்தால் பெரும் அதிர்ச்சிக்குள்ளானார்கள். இது தொடர்பாக ஆலாந்துறை போலீசார் வழக்குப் பதிவு செய்து பயிற்சியாளர் ஆறுமுகத்தை கைது செய்தனர்.

அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் போலி பயிற்சியாளர் என்றும் சென்னையில் உள்ள பேரிடர் மேலாண்மை அமைப்பின் அனுமதி இல்லாமல் போலியாக பயிற்சியாளர் என கூறி மாணவ - மாணவிகளுக்கு பயிற்சி அளித்து வந்ததும் தெரிய வந்தது.

 


ஆறுமுகம் தனது முகநூல் பக்கத்தில் நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே உள்ள பழவூர் கிராமத்தை சேர்ந்தவர் என்றும், நெல்லை எம்.டி.டி. இந்து பள்ளியில் படித்ததாகவும், சென்னை விவேகானந்தா கல்லூரியில் எம்.காம். படித்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இவர் சென்னையில் உள்ள தேசிய பேரிடர் மேலாண்மை பயிற்சி மையத்தில் பயிற்சியாளராக வேலை பார்ப்பதாக தெரிவித்து பல பள்ளி, கல்லூரிகளுக்கு சென்று ஒத்திகை நிகழ்ச்சி நடத்தியுள்ளார்.

அவர் தேசிய பேரிடர் மேலாண்மை நிறுவனத்தில் பணியாற்றுவதாக கூறியிருப்பது பொய்யான தகவல் என விசாரணையில் தெரியவந்துள்ளது.

ஆறுமுகம் தனது முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ள தகவல்களை அடிப்படையாக கொண்டு போலீசார் அவரிடம் விசாரணை மேற் கொண்டனர். அப்போது அந்த தகவல்களும் போலியானது என்று தெரியவந்தது.

போலி சான்றிதழ்களை காண்பித்து கடந்த 6 ஆண்டுகளாக பல்வேறு பள்ளி, கல்லூரிகளில் மாணவர்களுக்கு பேரிடர் மேலாண்மை பயிற்சி அளித்து வந்துள்ளார்.

அவரிடம் இருந்து கடிதம் சான்றிதழ்கள் கைப்பற்றப்பட்டன. அந்த கடிதத்தில் பேரிடர் மேலாண்மை ஆணையத்தில் அவர் 2 ஆண்டுகள் பயிற்சி பெற்று இருப்பதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்த சான்றிதழ்களில் முத்திரை எதுவும் இல்லை. இவை அனைத்தும் போலி என தெரிய வந்தது.

இவர் இதுவரை தமிழகம் முழுவதும் 1,275 பள்ளி, கல்லூரிகளில் பேரிடர் மேலாண்மை பயிற்சி அளித்துள்ளார். இவர் இதற்காக கல்வி நிறுவனங்களிடம் பணம் ஏதும் பெறவில்லை.

ஆனால் பயிற்சி முடிந்த பின்பு மாணவ-மாணவிகளிடம் பேரிடர் மேலாண்மை பயிற்சி முடித்ததாக தலா ரூ.50 வசூலித்து கொண்டு போலியாக சான்றிதழ் வழங்கியுள்ளார்.

கடந்த 6 ஆண்டுகளில் இவர் 5 லட்சம் மாணவர்களிடம் ரூ.2½ கோடி வசூலித்து இருப்பது தெரியவந்துள்ளது. எனவே இவருக்கு பின் பெரிய நெட்வொர்க் செயல்படுவதும் என்று தெரிய வந்துள்ளது.

இது தொடர்பாக தனிப்படை போலீசார் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர். இவரைப் போல மேலும் போலி பயிற்சியாளர்கள் செயல்படுகிறார்களா? என்று கண்காணித்து வருகிறார்கள். #CoimbatoreStudent #Logeshwari

Tags:    

Similar News