செய்திகள்
ஒளிவெள்ளத்தில் செய்யப்பட்ட அலங்கார வளைவுகளையும், புத்தாண்டு கொண்ட்டாட்டங்களை பார்வையிட குவிந்த மக்கள்.

அமீரகம் முழுவதும் புத்தாண்டு கொண்டாட்ட சிறப்பு நிகழ்ச்சிகள்- உற்சாகத்துடன் வரவேற்ற பொதுமக்கள்

Published On 2021-01-01 02:16 GMT   |   Update On 2021-01-01 02:16 GMT
அமீரக முழுவதும் இன்று புத்தாண்டு கொண்டாட்டத்தையொட்டி நள்ளிரவு முதல் பல்வேறு இடங்களில் நடந்த நிகழ்ச்சியில், பொதுமக்கள் உற்சாகத்துடன் வரவேற்றனர்.
அபுதாபி:

இன்று அமீரகத்தில் ஆங்கில புத்தாண்டு கொண்டாடப்படுவதை முன்னிட்டு அமீரக தலைவர்கள் வாழ்த்து செய்தியினை வெளியிட்டுள்ளனர். அமீரக அதிபர் மேதகு ஷேக் கலீபா பின் ஜாயித் அல் நஹ்யான் உலக நாடுகளின் மன்னர்கள், ஆட்சியாளர்கள், ஜனாதிபதிகள், பிரதம மந்திரிகள் ஆகியோருக்கு வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், இந்த புத்தாண்டில் அனைவரும் நல்ல உடல் நலத்துடன், அவர்கள் மக்களுடன் சிறந்த வளர்ச்சியை காண வாழ்த்துக்கள் என தெரிவித்துள்ளார். அதேபோல அமீரக துணை அதிபர் மேதகு ஷேக் முகம்மது பின் ராஷித் அல் மக்தூம் மற்றும் அபுதாபி பட்டத்து இளவரசர் மேதகு ஷேக் முகம்மது பின் ஜாயித் அல் நஹ்யான் ஆகியோரும் அனைத்து நாட்டு தலைவர்களுக்கும் நேற்று வாழ்த்து செய்தியினை அனுப்பினர்.

அபுதாபியில் நேற்று மாலை சுல்தான் பின் ஜாயித் தி பர்ஸ் ஸ்ட்ரீட் (முரூர் சாலை) மற்றும் ஷேக் ராஷித் பின் சயீத் சாலை (பழைய விமான நிலைய சாலை) ஆகிவை மூடப்பட்டன. துபாயில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்காக நேற்று மாலை 4 மணி முதல் ஷேக் முகம்மது பின் ராஷித், லோயர் பினான்சியல் செண்டர் சாலை ஆகிய சாலைகளும் 6 மணிக்கு அல் முஸ்தக்பால் சாலையும், இரவு 9 மணியில் இருந்து அப்பர் பினான்சியல் சாலையும், 4 மணியில் இருந்து அல் அசயல் சாலையும் மற்றும் இரவு 8 மணியில் இருந்து அல் சுகூக் ஆகிய சாலைகள் மூடப்பட்டது. துபாயில் புர்ஜ் கலீபா பகுதியில் நடைபெறும் புத்தாண்டு கொண்டாட்டங்களை கண்டுகளிக்க வசதியாக சாலை மற்றும் போக்குவரத்து ஆணையத்தின் சார்பில் பல்வேறு டாக்சி, கார் நிறுத்த பகுதிகள் மற்றும் மெட்ரோ நிலையத்தில் இருந்து 200 இலவச பஸ்கள் ஏற்பாடு செய்யப்பட்டது.

புர்ஜ் கலீபா கட்டிடம் அமைந்துள்ள டவுன் டவுன், துபாய் மால் உள்ளிட்ட பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வரப்பட்டது. புத்தாண்டு கொண்டாட்டங்கள் நடைபெற்ற போது குற்றபுலனாய்வு துறையினர் சிறப்பு ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

டவுன் டவுன் பகுதியில் உள்ள போலீஸ் கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாட்டு அறையில் உயர் போலீஸ் அதிகாரிகள் மேற்பார்வையிட்டு வந்தனர். பல்வேறு துறைகளின் அதிகாரிகளுக்காக முகாம்கள் ஆங்காங்கே அமைக்கப்பட்டுள்ளது.

அதேபோல மற்ற பகுதிகளில் உள்ள கட்டுப்பாட்டு அறையில் இருந்து அவ்வப்போது பாதுகாப்பு பணிகள் குறித்த தகவல்கள் துபாய் போலீஸ் தலைமை கட்டுப்பாட்டு அறைக்கு அதிகாரிகள் தொடர்ந்து அளித்து கொண்டு இருப்பார்கள். இந்த கட்டுப்பாட்டு அறைகள் மூலம் அதிகமாக பொதுமக்கள் கூடும் இடங்கள் தீவிரமாக கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

புர்ஜ் கலீபா கட்டிடத்தில் நேற்று நள்ளிரவு 12 மணியளவில் வாணவேடிக்கை நிகழ்ச்சி மற்றும் ‘லேசர் ஒளி’ காட்சியானது பிரமாண்டமாக ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் பல்வேறு வடிவங்கள் மற்றும் தலைவர்களின் படங்கள் லேசர் ஒளியில் பிரமாண்டமாக காட்சியளிக்கப்பட்டது. மேலும் வாண வேடிக்கைகளுக்கு இணையாக பல்வேறு வண்ணங்களில் வானில் லேசர் கற்றைகள் வலம் வர பார்வையாளர்கள் கைதட்டி ஆராவாரம் செய்தனர். இந்த இடங்களில் போக்குவரத்து மற்றும் மக்கள் கூடுவதை ஒழுங்குபடுத்துவதற்கு போலீசின் ஆளில்லா குட்டி விமானங்கள் கண்காணிப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டது.

பல்வேறு இடங்களில் இருந்து முன்பதிவு செய்திருந்த பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்கள் குடும்பத்தினருடன் வந்து சிறப்பு புத்தாண்டு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டனர். பலர் ஆன்லைன், தொலைக்காட்சி மூலமாக வாணவேடிக்கை நிகழ்ச்சிகளை கண்டுகளித்தனர். இன்று (வெள்ளிக்கிழமை) விடுமுறை என்பதால் கடற்கரை பகுதிகளுக்கு அதிக அளவிலான பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் செல்வார்கள்.
Tags:    

Similar News