செய்திகள்
நேர்காணலுக்கு வந்த பட்டதாரிகள்

குறைந்த நேரம் வேலை, அதிக சம்பளம் - நேர்காணலுக்கு வந்த பட்டதாரிகள் பேட்டி

Published On 2019-11-28 03:42 GMT   |   Update On 2019-11-28 03:42 GMT
குறைந்த நேரம் வேலை, அதிக சம்பளம், அரசாங்க வேலை என்பதால் நேர்காணலுக்கு வந்ததாக பட்டதாரிகள் கூறினர்.
கோவை:

நாட்டில் வேலையில்லா திண்டாட்டம் எந்த அளவிற்கு தலை விரித்தாடுகிறது என்பதை நிரூபிக்கும் வகையில் கோவை மாநகராட்சி அலுவலகத்தில் நேற்று நடந்த துப்புரவு பணியாளர் வேலைக்கான நேர்காணலுக்கு படித்த இளைஞர்கள் ஏராளமான பேர் வந்திருந்ததனர். நேர்காணலுக்கு ஓரளவு வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவர்களும் வந்திருந்தனர். அதிலும் பட்டதாரிகளும் வந்திருந்தது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

இதுகுறித்து பட்டதாரிகள் கூறியதாவது:-

நாங்கள் படித்த படிப்புக்கு தகுந்த வேலை இல்லை. வேலை கிடைக்காத காரணத்தினால் இந்த வேலைக்கு வந்துள்ளோம். எங்களுக்கு தனியாரில் மாதம் ரூ.8 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம் தான் சம்பளம் தருகிறார்கள். சில இடங்களில் அந்த சம்பளம் கூட கிடைப்பதில்லை. அதுவும் 10 மணி நேரம், 12 மணி நேரம் வேலை செய்ய வேண்டும். இரவு ஷிப்டும் வரும். வேலை நிரந்தரம் இல்லை.

ஆனால் துப்புரவு வேலையில் சேர்ந்தவுடனேயே ரூ.20 ஆயிரம் கொடுக்கிறார்கள். காலையில் 3 மணி நேரம், மாலையில் 3 மணி நேரம் தான் வேலை. மற்ற நேரங்களில் வேறு வேலை பார்த்துக் கொள்ளலாம். எல்லாவற்றிற்கும் மேலாக இது அரசாங்க நிரந்தர வேலை. ஞாயிற்றுக்கிழமை விடுமுறை. தேவைப்படும் போது விடுமுறை எடுத்துக் கொள்ளலாம். இந்த வேலை கிடைத்தால் மகிழ்ச்சி அடைவோம்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Tags:    

Similar News