செய்திகள்

வேட்பாளர் தவறு செய்தால் தேர்தலை ரத்து செய்யக் கூடாது- ஐகோர்ட்டில் ஏ.சி.சண்முகம் வக்கீல் வாதம்

Published On 2019-04-17 06:57 GMT   |   Update On 2019-04-17 08:40 GMT
வேட்பாளர் தவறு செய்தால் ஒட்டுமொத்தமாக தேர்தலை ரத்து செய்யக்கூடாது என வேலூர் பாராளுமன்றத் தொகுதி வேட்பாளர் ஏ.சி.சண்முகத்தின் வழக்கறிஞர் ஐகோர்ட்டில் வாதாடினார். #LokSabhaElections2019 #VelloreConstituency
சென்னை:

வேலூர் பாராளுமன்றத் தொகுதியில் வருமான வரித்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையின்போது, திமுக வேட்பாளர் கதிர் ஆனந்தின் வீடு, அவரது கல்வி நிறுவனம் மற்றும் திமுக பிரமுகர் சீனிவாசன் வீட்டில் கட்டுக்கட்டாக பணம் பறிமுதல் செய்யப்பட்டது. அதிக அளவிலான பணம் பறிமுதல் செய்யப்பட்டதால், அந்த தொகுதியில் தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளது.

ஆனால், தனது வீட்டில் பறிமுதல் செய்யப்பட்ட பணத்திற்கு சரியாக கணக்கு காண்பிக்கப்பட்டதாக கூறியுள்ள கதிர் ஆனந்த், அதிமுக வேட்பாளர் ஏ.சி.சண்முகத்தை வெற்றி பெற வைப்பதற்காக வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியதாக குற்றம்சாட்டினார். திட்டமிட்டபடி தேர்தலை நடத்தக்கோரி தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதி உள்ளார்.



இந்நிலையில், வேலூர் தொகுதியில் தேர்தலை நடத்தக் கோரி அதிமுக வேட்பாளர் ஏ.சி.சண்முகம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அவரது மனு இன்று அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. தேர்தல் ரத்து செய்யப்படுவதால் மக்களின் வரிப்பணம் தான் வீணாகிறது என்று மனுதாரர்கள் தரப்பில் வலியுறுத்தப்பட்டது.

ஏ.சி.சண்முகம் சார்பில் மூத்த வழக்கறிஞர் சதீஷ் பராசரன் ஆஜராகி வாதாடினார். ஒரு கட்சியோ அல்லது வேட்பாளரோ தவறு செய்தால் தவறு செய்த வேட்பாளர் மற்றும் அவர் சார்ந்த கட்சி மீதுதான் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒட்டுமொத்தமாக தேர்தலை ரத்து செய்யக்கூடாது என வலியுறுத்தினார். சட்டம்-ஒழுங்கு பிரச்சனை, இயற்கை பேரிடர் போன்ற காரணங்களால் மட்டுமே தேர்தலை ரத்து செய்யவோ ஒத்திவைக்கவோ முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார். #LokSabhaElections2019 #VelloreConstituency
Tags:    

Similar News