ஆன்மிகம்
மீனாட்சி அம்மன்

இன்று தொடங்கியது மதுரை மீனாட்சி அம்மன் கோவில் நவராத்திரி திருவிழா

Published On 2021-10-07 05:07 GMT   |   Update On 2021-10-07 05:07 GMT
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இன்று முதல் வருகிற 15-ந்தேதி வரை 10 நாட்கள் நவராத்திரி உற்சவம் நடக்கிறது. வருகிற 20-ந்தேதி சாந்தாபிஷேகமும், அன்னாபிஷேகமும் நடக்கிறது.
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் நவராத்திரி விழா 10 நாட்கள் விமரிசையாக கொண்டாடப்படும். ஆனால் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா காரணமாக நவராத்திரி விழா கட்டுப்பாட்டுகளுடன் நடந்து வருகிறது.

தற்போது கொரோனா பரவல் குறைந்து வருவதையொட்டி தளர்வுகளுடன் நவராத்திரி திருவிழாவுக்கு பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இன்று முதல் வருகிற 15-ந்தேதிவரை 10 நாட்கள் நவராத்திரி உற்சவம் நடக்கிறது. 10 நாட்களும் அம்மன் பல்வேறு அலங்காரங்களில் அருள்பாலிக்கிறார்.

இன்று (7-ந்தேதி) ராஜ ராஜேஸ்வரி அலங்காரத்திலும், நாளை ஊஞ்சல் வைபவமும், 9-ந்தேதி கோலாட்டம், 10-ந்தேதி திருநீல கண்டயாழப்பாணருக்கு தங்கபலகை கொடுத்தல், 11-ந்தேதி சங்கீத சீயாமளை நிகழ்ச்சியும் நடக்கிறது.

12-ந்தேதி பாண பத்திரருக்கு திருமுகம் கொடுத்தல் நிகழ்ச்சி நடக்கிறது. 13-ந்தேதி அம்மன் மகிஷாசுரமர்தினி வேடத்திலும், 14-ந்தேதி சிவபூஜையும் நடக்கிறது.

நவராத்திரி நாட்களில் தினசரி மாலை 6 மணி முதல் மீனாட்சி அம்மன், மூலஸ்தான சன்னதியில் திரைபோட்டு அபிஷேகம், அலங்காரம் நடைபெறும்.

தொடர்ந்து கல்பபூஜை, சகஸ்ரநாம பூஜை இரவு 8.30 மணி வரை நடக்கும். மேற்கண்ட நேரங்களில் அர்ச்சனைகள் நடத்தப்பட மாட்டாது.

கொலு மண்டபத்தில் எழுந்தருளும் அம்மனுக்கு அர்ச்சனைகள் செய்யப்படும். கோவில் கொலு சாவடியில் திருவிளையாடல்களை விளக்கும் கொலு பொம்மைகள் வைக்கப்படும். கொலு பொம்மைகள் கொடுக்க விரும்புபவர்கள் உள்துறை கண்காணிப்பு அலுவலகத்தில் ஒப் படைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

நவராத்திரி நாட்களில் அரசு விதிமுறைப்படி நாளை (8-ந்தேதி), 9-ந்தேதி (சனிக்கிழமை) மற்றும் நாளை மறுநாள் பக்தர்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப் பட மாட்டார்கள். மற்ற நாட்களில் வழக்கம்போல் சாமி தரிசனம் செய்யலாம்.

வருகிற 20-ந்தேதி (புதன் கிழமை), சாந்தாபிஷேகமும், அன்னாபிஷேகமும் நடக்கிறது.

மேற்கண்ட தகவலை இணை ஆணையர் செல்லத் துரை தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News