செய்திகள்
ஓ.பன்னீர்செல்வம்

நீட் தேர்வை நிரந்தரமாக ரத்து செய்ய கொள்கை முடிவு எடுக்க வேண்டும் - பிரதமருக்கு ஓபிஎஸ் கடிதம்

Published On 2021-06-06 22:45 GMT   |   Update On 2021-06-06 22:45 GMT
நீட் தேர்வினை அறிமுகப்படுத்த மத்திய அரசு முடிவெடுத்தபோதே கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தியவர் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா.
சென்னை:

பிரதமர் நரேந்திர மோடிக்கு அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:

மருத்துவ படிப்புக்கான ‘நீட்' தேர்வினை ஆரம்ப காலத்தில் இருந்தே தொடர்ந்து எதிர்த்து வந்தவர் என்னுடைய அன்புக்குரிய தலைவர், அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா என்பதை நீங்கள் அறிவீர்கள். 2011-ம் ஆண்டு இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான சேர்க்கைக்கு ‘நீட்' தேர்வினை அறிமுகப்படுத்த அப்போதைய மத்திய அரசு முடிவு எடுத்தபோது, அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா தனது கடுமையான ஆட்சேபணையை கடிதம் வாயிலாக அப்போதைய பிரதமருக்குத் தெரிவித்தார்.

அதன்பின், 2012-ம் ஆண்டு மத்திய அரசால் அரசாணை வெளியிடப்பட்ட போது, தனது கடுமையான எதிர்ப்பினை ஜெயலலிதா பதிவு செய்ததோடு, தன் இறுதி மூச்சு வரை அதேநிலைப்பாட்டில் இருந்தார். 2006-ம் ஆண்டு தமிழ்நாடு தொழிற்கல்வி படிப்புகளில் சேர்க்கையை ஒழுங்குமுறைப்படுத்துவதற்கான சட்டத்தை இயற்றியது உள்பட மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையை முறைப்படுத்துவதற்காக 2005-ம் ஆண்டு முதல் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டவர் ஜெயலலிதா.



ஜெயலலிதாவின் வழியைப் பின்பற்றி, 2017-ம் ஆண்டு 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் மருத்துவச் சேர்க்கை அமையும் வகையில், இரண்டு சட்ட முன்வடிவுகள், அதாவது 2017-ம் ஆண்டு தமிழ்நாடு மருத்துவ அறிவியல் இளநிலை மற்றும் பல் மருத்துவ இளநிலை படிப்புகள் சேர்க்கைக்கான சட்ட முன்வடிவு மற்றும் 2017-ம் ஆண்டு தமிழ்நாடு மருத்துவம் மற்றும் பல் மருத்துவத்தில் முதுநிலைப்பட்டப் படிப்புகளுக்கான சேர்க்கை சட்ட முன்வடிவு ஆகியவை ஒருமனதாக தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் நிறைவேற்றப்பட்டு ஜனாதிபதியின் ஒப்புதலுக்காக மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால், எதிர்பாராதவிதமாக அது பயனளிக்கவில்லை.

இந்தத் தருணத்தில், தமிழ்நாட்டில் உள்ள மாணவர்கள் ‘நீட்' தேர்வில் கலந்து கொள்ள பல சங்கடங்களை மேற்கொள்கிறார்கள்.

‘நீட்' தேர்வு மட்டுமல்லாமல் அனைத்துக் கல்லூரிப் படிப்புகளுக்குமான நுழைவுத் தேர்வை நிரந்தமாக ரத்து செய்யும் வகையில் ஒரு கொள்கை முடிவை தாங்கள் எடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
Tags:    

Similar News