லைஃப்ஸ்டைல்
2020 முதல் 2030 புதிய பாதையில் பெண்களின் பத்தாண்டு

2020 முதல் 2030 புதிய பாதையில் பெண்களின் பத்தாண்டு

Published On 2020-09-01 05:06 GMT   |   Update On 2020-09-01 05:06 GMT
2030 வரையிலான புதிய பத்தாண்டு பெண்களுக்கானது. கடந்த நூறு ஆண்டுகளில் நடந்ததைவிட அதிக மாற்றங்கள் பெண்களின் உலகத்தில் வருகிற பத்தாண்டுகளில் தோன்றும்.
2030 வரையிலான புதிய பத்தாண்டு பெண்களுக்கானது. கடந்த நூறு ஆண்டுகளில் நடந்ததைவிட அதிக மாற்றங்கள் பெண்களின் உலகத்தில் வருகிற பத்தாண்டுகளில் தோன்றும். விஞ்ஞானமும், தொழில்நுட்பமும் பெண்களுக்கு வரப்பிரசாதமாக அமையும். அறிவும், ஆற்றலும், தன்னம்பிக்கையும் நிறைந்த பெண்களுக்கான காலமாக இந்த பத்தாண்டுகள் இருக்கும்.

அதில் பெண்கள் உலகம் சந்திக்கும், சாதிக்கும் விஷயங்கள் என்னென்னவாக இருக்கும் என்பது தெரியுமா?

வருகிற பத்தாண்டுகளில் உணர்ச்சிகளை வெளிப்படுத்தக்கூடிய எந்திர மனிதர்கள் உருவாக்கப்பட்டு விடுவார்கள். அதற்கான ஆராய்ச்சிகள் உச்சகட்டத்தை அடைந்திருக்கின்றன. மனிதர்கள் காட்டுவதை போன்ற அன்பு, கருணை, கோபம், மகிழ்ச்சி போன்றவைகளை ரோபோட்டுகளும் வெளிப்படுத்தி, மனிதர்களோடு கலந்து மனிதர்களின் உணர்வுகளுக்கு வடிகாலாக இருப்பார்கள். சில நேரங்களில் சிலர் அதனை தங்கள் வாழ்க்கைத்துணை போன்றும் பாவிக்கலாம். அந்த துணை மது அருந்தாத, சிகரெட் புகைக்காத, ஆரோக்கியத்தை கொண்டதாக இருக்கும். உணர்ச்சிவசப்பட்டு எதிர்மறையான முடிவுகளை எடுக்காமல், மனிதர்களைவிட திறமை கொண்டதாகவும் அந்த எந்திரங்கள் இருக்கலாம். அதனால் அவைகளுக்கு மவுசு அதிகரிக்கும்.

பெற்றோர் தங்கள் மகளிடம் ஒரு இளைஞனை குறிப்பிட்டு அவனை திருமணம் செய்துகொள்ளவேண்டும் என்று கட்டாயப்படுத்தும்போது அவள், ‘அவனை திருமணம் செய்து என் வாழ்க்கையை கெடுத்துக்கொள்வதற்கு பதில், நான் ஒரு எந்திர மனிதனை திருமணம் செய்துகொண்டால் நிம்மதியாக வாழ்வேன்’ என்றுகூட சொல்லும் நிலை பத்தாண்டுகளில் உருவாகலாம்.

நவீன தொழில்நுட்பங்கள் பெண்களை சமையல் அறையில் இருந்து இந்த பத்தாண்டுகளில் வெளிக்கொண்டு வந்துவிடும். சமையல்வேலை மற்றும் அலுவலக வேலை இரண்டையும் சேர்த்து செய்யும் பெண்களை 2030-ல் பார்ப்பது ஓரளவு சிரமமானதாக இருக்கலாம். குடும்பத்தலைவிகளையும் வீட்டையும் நவீன தொழில்நுட்பத்தால் இணைத்துவிடுவார்கள். பெண்கள் அலுவலகத்தில் இருந்து ஆன்லைன் வழியாக வீட்டையும், சமையல் அறையையும் இயக்கிக்கொண்டிருப்பார்கள். வீட்டில் இருந்து அலுவலகத்தை இயக்குவார்கள். இரண்டு இடத்திலும் இல்லாமல், இன்னொரு இடத்தில் இருந்து எல்லாவற்றையும் இயக்கியும் சாதித்துக்காட்டுவார்கள்.

ஆரோக்கியம் முழுவதையும் நவீன தொழில்நுட்பம் தன்வசம் எடுத்துக்கொள்ளும். உடல், தொழில்நுட்ப ‘சென்ஸாருடன்’ இணைக்கப்பட்டுவிடும். பெண்களுடைய உடல்நிலையில் ஏற்பட்டிருக்கும் எல்லா மாற்றங்களையும் அது வெளிப்படுத்தும். ரத்த அழுத்தமோ, இதயபாதிப்போ, கர்ப்ப காலத்து மாற்றங்களோ எல்லாவற்றையும் அதுவே உணர்த்திவிடும்.

பெண்களுக்கு அடுத்த பத்தாண்டுகளில் தங்களுடைய உடல் மீது அதிக விழிப்புணர்வு தோன்றும். இப்போது பெண்கள் அதிகம் சாப்பிட்டு உடல்குண்டானவர்களாக இருக்கிறார்கள். அதில் குறிப்பிடத்தக்க மாற்றம் உருவாகும். பெண்கள் உணவிலும், உடல் தோற்றத்திலும் கூடுதல் அக்கறை செலுத்துவார்கள். பெண்கள் இளமையை தக்கவைத்துக்கொள்ள புதிய விஞ்ஞானபூர்வமான விஷயங்களை கையாளத் தொடங்கிவிடுவார்கள். அதற்கு ஸ்டெம்செல் தெரபி கைகொடுக்கும். இந்த துறையில் ஏராளமான ஆய்வுகள் நடந்துகொண்டிருக்கின்றன. அழகோடும், இளமையோடும் வாழ இதனை பல பெண்கள் 2030-களில் பயன்படுத்திக்கொண்டிருப்பார்கள்.

குழந்தைகளுக்காக ‘ஸ்மார்ட் சாக்ஸ்’ உருவாக்கப்பட்டுவிடும். அந்த சாக்ஸை பொருத்திவிட்டால் போதும், குழந்தைக்கு காய்ச்சலோ, சுவாசப் பிரச்சினையோ ஏற்பட்டால் அந்த சாக்ஸ் மூலம் தெரிந்துகொள்ளலாம். அதிலுள்ள விவரங்கள் அனைத்தும் ஒரு ‘ஆப்’க்கு செல்லும். பெற்றோர்களுக்கு குழந்தையின் உடல்நலம் பற்றி என்னவெல்லாம் தெரியவேண்டுமோ அவைகளை எல்லாம் அந்த ‘ஆப்’ அறிவிக்கும்.

பிரா, என்றதும் பெண்களின் மார்பழகை மேம்படுத்த பயன்படும் உள்ளாடை என்றுதான் நாம் கருதுவோம். அடுத்த பத்தாண்டுகளில் ‘ஸ்மார்ட் பிரா’ உருவாக்கப்பட்டுவிடும். அது அணிந்திருக்கும் பெண்ணின் இதய துடிப்பு, உடல் இயக்கம், உடல் ஆரோக்கியம், சுவாச கட்டமைப்புகளின் செயல்பாடு போன்ற அனைத்தையும் அளவீடு செய்துவிடும். உடல் இயக்கத்தில் ஏதாவது கோளாறு ஏற்பட்டால் பிராவில் இருக்கும் இன்டிகேட்டர் அதற்குரிய அதிர்வை வெளியிட்டு எச்சரிக்கை செய்யும். அதோடு ஏதாவது ஒரு மருத்துவமனை நிர்வாகத்தையும் தொழில் நுட்ப உதவியோடு இணைத்துவைத்திருந்தால், ‘உங்கள் பிரா இன்னென்ன பிரச்சினைகள் இருப்பதாக அறிவிக்கிறது. ஆம்புலன்ஸ் அனுப்புகிறோம். உடனே மருத்துவமனைக்கு வந்துவிடுங்கள்’ என்ற அழைப்பு மருத்துவமனையில் இருந்து வரும்.

இப்போது பெருமளவு பெண்கள் குழந்தையின்மையால் அவதிப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். அதற்கு 2030-க்குள் புதிய விடிவு கிடைத்துவிடும். பிரசவத்தை தள்ளிப்போடும் பெண்கள் தங்கள் சினைமுட்டை தரமாக இருக்கும் இளம் பருவத்திலே அவைகளை எடுத்து பிற்காலத்தில் பயன்படுத்தும் அளவுக்கு சேமிப்பது பெருமளவு அதிகரித்துவிடும். அவர்கள் எப்போது தாய்மையடைய விரும்புகிறார்களோ அப்போது எடுத்து பயன்படுத்திக்கொள்வார்கள். கருப்பை மாற்று ஆபரேஷனும் நவீன வழிமுறைகளில் கையாளப்படும் சூழ்நிலைகள் உருவாகும். அதனால் மெனோபாஸ் காலகட்டத்திற்கு பின்பும் பெண்கள் செயற்கைமுறையில் தாய்மையடைந்து பிரசவிப்பது அதிகரிக்கும். இதுபோன்ற பலவிதமான மாற்றங்கள் 2030-க்குள் நிறையவே நடக்கும். அதில் பல நம்மை ஆச்சரியப்படவைக்கும்.
Tags:    

Similar News