இந்தியா
கைது

23 பெண்களை ஏமாற்றி பல லட்சம் ரூபாய் மோசடி- முன்னாள் மின்வாரிய ஊழியர் கைது

Published On 2022-01-10 04:21 GMT   |   Update On 2022-01-10 04:21 GMT
திருமணம் செய்வதாக கூறி 23 பெண்களை ஏமாற்றி பல லட்சம் ரூபாய் மோசடி செய்த முன்னாள் மின்வாரிய ஊழியரை போலீசார் கைது செய்துள்ளனர்.
பெங்களூரு:

பெங்களூரு நகரில் ஒரு இளம்பெண் வசித்து வருகிறார். அவருக்கு, சமீபத்தில் தனியார் திருமண தகவல் மையம் மூலமாக ஒரு நபரின் அறிமுகம் ஏற்பட்டது. அந்த இளம்பெண்ணும், அந்த நபரும் திருமணம் செய்ய முடிவு செய்தார்கள். இதற்கிடையில், பல்வேறு காரணங்களை கூறி, இளம்பெண்ணிடம் இருந்து அந்த நபர் பல லட்சம் ரூபாயை வாங்கியதாக கூறப்படுகிறது. பின்னர் இளம்பெண்ணை திருமணம் செய்யாமலும், அவரிடம் வாங்கிய பணத்தை திரும்ப கொடுக்காமலும் மோசடி செய்திருந்தார்.

இதுகுறித்து தென்கிழக்கு மண்டல சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் இளம்பெண் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த நபரை கைது செய்ய நடவடிக்கை எடுத்து வந்தனர். இந்த நிலையில், சைபர் கிரைம் போலீசாருக்கு கிடைத்த தகவலின் பேரில் விஜயாப்புராவை மாவட்டத்தை சேர்ந்த மோசடி நபரை கைது செய்துள்ளனர்.

அந்த நபர் விஜயாப்புரா மாவட்டத்தில் வசித்து வந்துள்ளார். அவரது தந்தை மின்வாரியத்தில் அதிகாரியாக பணியாற்றி இருந்தார். பணியின் போது அவர் உயிர் இழந்ததால், அவரது மகனான மோசடி நபருக்கு மின்வாரியத்தில் ஊழியர் வேலை கிடைத்திருந்தது. 8 மாதங்கள் மட்டுமே அவர் மின்வாரியத்தில் வேலை பார்த்திருந்தார். இதற்கிடையில், கடந்த 2013-ம் ஆண்டு விஜயாப்புரா மாவட்டம் முத்தேபிகால் பகுதியை சேர்ந்த சுனிதா என்பவரை அந்த நபர் கொலை செய்திருந்தார்.

இதற்காக அந்த நபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்திருந்தனர். 2 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்த அந்த நபர், ஜாமீனில் வெளியே வந்திருந்தார். கொலை வழக்கில் கைதானதால் மின்வாரியத்தில் ஊழியர் வேலையும் அவருக்கு பறி போய் இருந்தது. இதனால் வேலை இல்லாமலும், பணப்பிரச்சினையாலும் சிரமப்பட்டுள்ளார்.

இதையடுத்து, தனியார் திருமண தகவல் மையம் மூலமாக மாப்பிள்ளை தேடும் இளம்பெண்கள், பெண்களை அடையாளம் கண்டு, அவர்களுடன் தொடர்பை ஏற்படுத்தி கொண்டு திருமணம் செய்வதாக கூறி வந்துள்ளார். ஆனால் எந்த ஒரு பெண்களையும் திருமணம் செய்யாமல், அவர்களிடம் இருந்து பல லட்சம் ரூபாய் வாங்கி அந்த நபர் மோசடிசெய்தது தெரியவந்தது. இதுவரை 23 பெண்களை திருமணம் செய்வதாக கூறி, அவர்களை திருமணம் செய்யாமல் பல லட்சம் ரூபாய் வாங்கி மோசடி செய்தது தெரியவந்தது.

இவ்வாறு மோசடி செய்யும் பணத்தின் மூலம் டெல்லி, மும்பை, பஞ்சாப் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு சென்று அந்த நபர் ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்து வந்தது தெரியவந்தது. அந்த நபரின் வங்கி கணக்கில் இருந்த ரூ.1¾ லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. கைதான நபர் மீது சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News