செய்திகள்
பெண் போலீஸ் தற்கொலை முயற்சி

அஞ்செட்டி அருகே பெண் போலீஸ் தற்கொலை முயற்சி

Published On 2019-11-05 03:43 GMT   |   Update On 2019-11-05 03:43 GMT
அஞ்செட்டி அருகே காதல் விவகாரத்தால் பெண் போலீஸ் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தேன்கனிக்கோட்டை:

கிருஷ்ணகிரி மாவட்டம், அஞ்செட்டி அருகே உள்ள பாண்டுரங்கன் தொட்டியை சேர்ந்தவர் பாண்டுரங்கன். இவரது மகள் நதியா (வயது 26).

கடந்த ஆண்டு 2-ம் நிலை காவலராக பணியில் சேர்ந்த இவர், திருப்பூர் மாவட்ட ஆயுதப்படையில் பணியாற்றி வருகிறார். 3 நாள் விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்த நதியா நேற்று வி‌ஷம் குடித்து தற்கொலைக்கு முயற்சி செய்தார்.

இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் மற்றும் உறவினர்கள், அவரை மீட்டு தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு நதியாவுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து தகவல் அறிந்த அஞ்செட்டி போலீசார் தேன்கனிக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று விசாரணை நடத்தினார்கள்.

அதே பகுதியை சேர்ந்த கிருஷ்ணகிரி மாவட்ட மோப்ப நாய் பிரிவில் பணியாற்றி வரும் 2-ம் நிலை காவலரான கண்ணன் (28) என்பவரும், நதியாவும் கடந்த 4 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். உறவினர்களான இவர்களது இரு குடும்பத்தினரிடையே கடந்த 40 ஆண்டுகளாக முன்விரோதம் இருந்து வந்தது. இந்த நிலையில் கண்ணனும், நதியாவும் இரு குடும்பத்தினருக்கும் தெரியாமல் பழகி வந்தனர். இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது.

நதியாவை கல்லூரியில் படிக்க வைத்து போலீஸ் வேலையில் சேர கண்ணன் உதவியதாக தெரியவந்தது.

விடுமுறையில் ஊருக்கு திரும்பிய நதியா கிருஷ்ணகிரிக்கு சென்று கண்ணனிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி கேட்டார். அப்போது அவர் இரு குடும்பத்தினரிடையே உள்ள முன்விரோதம் காரணமாக திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த நதியா வி‌ஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றதாக அஞ்செட்டி போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News