செய்திகள்
ரெயில் மறியல்

சுரங்கப்பாதையில் தேங்கிய மழைநீரை அகற்றக்கோரி - கிராமமக்கள் ரெயில் மறியல்

Published On 2019-12-02 16:57 GMT   |   Update On 2019-12-02 16:57 GMT
சிவகங்கை அருகே சுரங்கப்பாதையில் தேங்கிய மழைநீரை அகற்றக்கோரி கிராம மக்கள் ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சிவகங்கை:

சிவகங்கை-மானாமதுரை சாலையில் கீழகண்டனியில் இருந்து மேலவெள்ளஞ்சி கிராமம் செல்லும் வழியில் ரெயில் தண்டவாள பாதை உள்ளது. கீழகண்டனியில் இருந்து மேலவெள்ளஞ்சி உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு செல்ல ரெயில்வே சுரங்கப்பாதை உள்ளது. ஆனால் இந்த சுரங்கப்பாதையில் எப்போதும் நீர் தேங்கி நிற்கிறது.

தற்போது மழைக்காலம் என்பதால் இந்த சுரங்கப்பாதையில் அதிக அளவில் மழைநீர் தேங்கியுள்ளது. இதனால் சுரங்கப்பாதை வழியே கிராமத்தினர் சென்று வருவதில் கடும் சிரமம் ஏற்பட்டு வருகிறது.

இந்த கிராமங்களுக்கு செல்ல இந்த ஒரு வழி மட்டுமே உள்ளது. இந்நிலையில் சுரங்கப்பாதையில் தேங்கிய நீர் அகற்றப்படாமல் உள்ளதை கண்டித்தும், இதற்கு நிரந்தர தீர்வு காண வலியுறுத்தியும் இந்த பகுதிமக்கள் நேற்று ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் அவர்கள் ரெயில் பாதையில் சிவப்பு துணியை கட்டி வைத்தனர். அப்போது அந்த வழியாக ராமேசுவரம்-திருச்சி பயணிகள் ரெயில் வந்தது. ரெயில் பாதையில் ஆட்கள் நிற்பதையும், சிவப்பு துணி கட்டியிருப்பதையும் பார்த்த என்ஜின் டிரைவர், ரெயிலை சற்று தொலைவில் நிறுத்திவிட்டார். 

இதுகுறித்து தகவல் அறிந்த ரெயில்வே அதிகாரிகள் மற்றும் போலீசார் அங்கு வந்து கிராமமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர்கள் உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்ததை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது. சுமார் 45 நிமிடம் தாமதமாக அந்த ரெயில் புறப்பட்டு சென்றது.
Tags:    

Similar News