உள்ளூர் செய்திகள்
FILE PHOTO

முழு ஊரடங்கில் போட்டிகள் நடத்த அனுமதி இல்லை

Published On 2022-01-15 06:40 GMT   |   Update On 2022-01-15 06:40 GMT
அரியலூர் மாவட்டத்தில் நாளை எந்த ஒரு விளையாட்டுப் போட்டிகளும் நடத்த அனுமதி இல்லை என்று கலெக்டர் தெரிவித்துள்ளார்.

அரியலூர்:

அரியலூர் மாவட்ட ஆட்சியரகத்தில் மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி, செய்தியாளர்களுக்கு    பேட்டியளித்தார். அப்போது அவர் தெரிவித்ததாவது:

தமிழகத்தில் கொரோனா நோய் தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் நாளை (16&ந் தேதி)தமிழக அரசின் சார்பில் முழு ஊடரங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. காணும் பொங்கல் என்பதால் அன்றைய தினம் அரியலூர் மாவட்டத்தில் விளையாட்டுப் போட்டிகள் நடத்தும் வழக்கம் உள்ளது. ஆனால் ஊரடங்கு என்பதால் அரியலூர் மாவட்டத்தில் எந்த விதமான போட்டிகளும் நடத்த அனுமதி இல்லை.

மற்ற நாட்களில் நடத்தப்படும் போட்டிகளுக்கு கடந்த ஆண்டை போலவே காவல் துறை, உள்ளாட்சி அமைப்புகள் உள்ளிட்ட துறைகளில் ஏற்கனவே உள்ள நடைமுறைகளின்படி உரிய அனுமதி பெற்று போட்டிகள் நடத்துவதுடன், சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் கலந்து ஆலோசித்தும் போட்டிகள் நடத்தப்பட வேண்டும்.

அரியலூர் மாவட்டத்தை பொருத்தவரையில் கொரோனா முதல் தவணை தடுப்பூசி 100 சதவீதமும், இரண்டாம் தவணை தடுப்பூசி சுமார் 86 சதவீதமும் செலுத்தப்பட்டுள்ளது. இரண்டாம் தவணை தடுப் பூசியையும் பொதுமக்களுக்கு முழுமையாக செலுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கொரோனா தடுப்பு வழிமுறைகள் பின்பற்றி பொது இடங்களில் எந்தவொரு நிகழ்ச்சிகளும் நடைபெறுவது உறுதி செய்யப்படும். எனவே, பொது மக்கள் அனைவரும் கொரோனா தடுப்பு வழி முறைகளை தொடர்ந்து பின்பற்ற வேண்டும்.

கொரோனா தொற்றிலிருந்து பொதுமக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டிய நேரம் இது. இவ்வாறு கலெக்டர் தெரிவித்தார்.

இந்நிகழ்வில், மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய்னுலாப்தீன், ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர் சுந்தர்ராஜன் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் உடனிருந்தனர்.
Tags:    

Similar News