செய்திகள்
விஜயகாந்த்

கூட்டணி குறித்து விவாதிக்க தே.மு.தி.க. பொதுக்குழு கூடுகிறது

Published On 2020-12-05 04:52 GMT   |   Update On 2020-12-05 07:24 GMT
கூட்டணி குறித்து விவாதிப்பதற்காக இந்த மாத இறுதிக்குள் அல்லது ஜனவரி முதல் வாரத்தில் தே.மு.தி.க. பொதுக்குழு கூடுகிறது.
சென்னை:

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் மருத்துவர்கள் ஆலோசனைப்படி ஓய்வெடுத்து வருகிறார்.

சட்டப்பேரவை தேர்தலை சந்திப்பது, புதிய நிர்வாகிகள் நியமனம், பூத் கமிட்டிகள் அமைப்பது போன்ற பணிகளை பொருளாளர் பிரேமலதா, சுதீஷ் மற்றும் மூத்த நிர்வாகிகள் செய்து வருகிறார்கள்.

கடந்த சட்டமன்ற தேர்தலில் மக்கள் நலக்கூட்டணி உருவாக்கப்பட்டு விஜயகாந்த் முதல்-அமைச்சர் வேட்பாளராக முன்னிறுத்தப்பட்டார். ஆனால் அதில் தே.மு.தி.க.வுக்கு தோல்வியே ஏற்பட்டது.

அதன் பின் நடந்த பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. இடம் பெற்றது. 2011-ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. இடம் பெற்று போட்டியிட்டது. அப்போது விஜயகாந்த் எதிர்க்கட்சி தலைவரானார். அதன்பின் நடந்த 2016 சட்டமன்ற தேர்தலில் தே.மு.தி.க. தனித்து போட்டியிட்டது.

இந்த நிலையில் சமீபத்தில் பேட்டியளித்த பிரேமலதா தே.மு.தி.க. கட்சி அ.தி.மு.க. கூட்டணியில் தற்போது உள்ளது என்றும், சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து விஜயகாந்த் இறுதி முடிவு எடுப்பார். இதற்காக விரைவில் தே.மு.க.வின் செயற்குழு, பொதுக்குழு கூடும் என்று தெரிவித்தார்.

மேலும் தே.மு.தி.க. தனித்து போட்டியிட வேண்டும் என்றும் விஜயகாந்த் கிங்காக இருக்க வேண்டும் என்றும் தொண்டர்கள் விரும்புவதாக பிரேமலதா தெரிவித்தார்.

இதற்கிடையே விஜயகாந்தின் மகன் விஜயபிரபாகர் கூறும்போது, “தே.மு.தி.க. தலைமையில் 3-வது அணி அமைய வாய்ப்புள்ளது” என்று தெரிவித்தார்.

இதற்கிடையே கூட்டணி குறித்து விவாதிப்பதற்காக தே.மு.தி.க. பொதுக்குழு இந்த மாதம் தொடக்கத்தில் கூடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் விஜயகாந்தின் உடல்நிலை மற்றும் மழை காரணமாக பொதுக்குழு கூடுவது தாமதம் ஆகும் என்று தகவல்கள் வெளியானது.

இந்த நிலையில் இந்த மாத இறுதிக்குள் அல்லது ஜனவரி முதல் வாரத்தில் தே.மு.தி.க. பொதுக்குழு கூடுகிறது. தற்போதைய அரசியல் களத்தில் கமல், ரஜினி ஆகியோர் தீவிர அரசியலில் குதித்துள்ளனர்.

இதனால் வாக்குகள் சிதற வாய்ப்புள்ளது. இதையடுத்து தே.மு.தி.க.வின் ஓட்டு வங்கியை தக்க வைத்து கொள்வதில் அக்கட்சி தலைவர்கள் தீவிர ஆலோசனை நடத்தி வருகிறார்கள்.

இதுபோன்ற சூழ்நிலையில் தே.மு.தி.க. பொதுக்குழு கூட இருக்கிறது. இதில் அ.தி.மு.க. கூட்டணியிலேயே நீடித்து சட்டமன்ற தேர்தலை சந்திக்கலாமா? அல்லது தனித்து போட்டியிடலாமா? 3-வது அணி அமைத்து தேர்தலை எதிர்கொள்ளலாமா? என்பது குறித்து ஆலோசிக்கப்படுகிறது.

தற்போது அரசியல் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதால் கூட்டணி குறித்து நிர்வாகிகளுடன் ஆலோசிக்க உள்ளனர்.

முந்தைய தேர்தல்களில் கூட்டணி அமைப்பதில் ஏற்பட்ட தாமதங்கள், குழப்பங்கள் ஏற்பட கூடாது என்று கட்சி விரும்புவதாகவும் மூத்த நிர்வாகிகள் தெரிவித்தனர்.
Tags:    

Similar News