செய்திகள்
சிறுமிகளின் திருமணம் தடுத்து நிறுத்தம்

தண்டராம்பட்டு, கலசபாக்கத்தில் 2 சிறுமிகளின் திருமணம் தடுத்து நிறுத்தம்

Published On 2020-09-13 14:18 GMT   |   Update On 2020-09-13 14:18 GMT
தண்டராம்பட்டு, கலசபாக்கத்தில் 2 சிறுமிகளின் திருமணத்தை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர்.
திருவண்ணாமலை:

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள தண்டராம்பட்டு மற்றும் கலசபாக்கம் அருகில் உள்ள கிராமங்களை சேர்ந்த 14 வயதுடைய 2 சிறுமிகளுக்கு திருமணம் செய்து வைக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளதாக திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு புகார்கள் வந்தது.

கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி உத்தரவின் பேரில் சமூக நலத்துறை அலுவலர் கிறிஸ்டீனா டார்த்தி மேற்பார்வையில் போலீசார், சைல்டுலைன் மற்றும் சமூக நலத்துறை அலுவலர்கள் 2 சிறுமிகளின் இல்லங்களுக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர்.

அப்போது 2 சிறுமிகளுக்கும் திருமணம் செய்து வைக்க அவர்களது குடும்பத்தினர் மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வந்தது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து சிறுமிகளுக்கு திருமணம் செய்து வைப்பது சட்டப்படி குற்றம் என்று அவர்களது பெற்றோர்களுக்கு அலுவலர்கள் அறிவுரை வழங்கினர். தொடர்ந்து திருமணத்தை தடுத்து நிறுத்தி, 2 சிறுமிகளை மீட்டு திருவண்ணாமலையில் உள்ள குழந்தைகள் நலக்குழுமத்தில் அலுவலர்கள் ஒப்படைத்தனர்.

குழந்தை திருமணம் தடுப்பு குறித்து அரசு தரப்பில் பல்வேறு விழிப்புணர்வுகள் செய்து வந்தாலும் அதனை சிலர் கண்டு கொள்ளாமல் தொடர்ந்து அந்த தவறை செய்து வருவதாகவும், இது குறித்து மாவட்ட நிர்வாகம் சார்பில் கூடுதல் விழிப்புணர்வு செய்ய வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Tags:    

Similar News