செய்திகள்
கைது

பொள்ளாச்சியில் வங்கியில் கள்ள ரூபாய் நோட்டுகள் டெபாசிட்- வாலிபர் கைது

Published On 2021-02-21 09:39 GMT   |   Update On 2021-02-21 09:39 GMT
பொள்ளாச்சியில் தனியார் வங்கியில் கள்ள ரூபாய் நோட்டுகள் டெபாசிட் செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

பொள்ளாச்சி:

பொள்ளாச்சி- கோவை ரோட்டில் ஒரு தனியார் வங்கி செயல்பட்டு வருகிறது. சம்பவத்தன்று ஒரு வாலிபர் வங்கியில் ரூ.2 லட்சம் டெபாசிட் செய்ய வந்தார். குறிப்பிட்ட வங்கி கணக்கில் பணத்தை டெபாசிட் செய்யுமாறு அங்குள்ள கேஷியரிடம் கொடுத்தார்.

பணத்தை வாங்கிய கேஷியர் அதனை எந்திரத்தில் வைத்து எண்ணினார். சில ரூபாய் நோட்டுக்கள் மீது அவருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இது குறித்து அவர் மேனேஜர் செல்வகுமரேசனுக்கு தகவல் தெரிவித்தார்.

வங்கி மேனேஜர் மற்றும் ஊழியர்கள்ரூ.2 லட்சம் ரூபாய் நோட்டுக்களையும் சோதனை செய்தனர். அதில் 28 எண்ணிகையிலான 500 ரூபாய் நோட்டுகள் கள்ளநோட்டுகள் என்பது தெரியவந்தது. 14 ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டுகளை பறிமுதல் செய்த மேனேஜர் இது குறித்து பொள்ளாச்சி கிழக்கு போலீசுக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் வங்கியில் கள்ள ரூபாய் நோட்டுகளை செலுத்த வந்த வாலிபர் பொள்ளாச்சி ஆவலப்பம்பட்டியை சேர்ந்த விஜயகுமார் (34) என்பது தெரியவந்தது.

கள்ள நோட்டு குறித்து அவரிடம் கேட்டபோது, நான் இங்குள்ள தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறேன். அவர்கள் பணத்தையும், வங்கி எண்ணையும் கொடுத்து டெபாசிட் செய்யுமாறு அனுப்பி வைத்தனர். அதன்படி டெபாசிட் செய்ய வந்தேன். கள்ளநோட்டு குறித்து எனக்கு ஒன்றும் தெரியாது என்றார். இதனையடுத்து ரூ.14 ஆயிரம் கள்ளநோட்டுக்களை பறிமுதல் செய்த போலீசார் விஜயகுமாரை கைது செய்தனர். விஜயகுமாரிடம் பணம் கொடுத்து அனுப்பிய தனியார் நிறுவனம் எது? அவர்களுக்கு கள்ளநோட்டு எப்படி கிடைத்தது? என்து குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கள்ள ரூபாய் நோட்டு அச்சடிக்கும் கும்பல் கோவை, பொள்ளாச்சி பகுதியில் பதுங்கி அச்சடித்து வருகிறார்களா? என்று போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். வங்கியில் வாலிபர் கள்ள ரூபாய் நோட்டுக்களை டெபாசிட் செய்ய வந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

Similar News