செய்திகள்
ஈரான் எண்ணெய் கப்பல்

ஈரான் எண்ணெய் கப்பல் துருக்கி நோக்கி பயணம்

Published On 2019-08-24 10:32 GMT   |   Update On 2019-08-24 10:32 GMT
ஜிப்ரால்டர் ஜலசந்தி பகுதியில் பிரிட்டனால் சிறைபிடிக்கப்பட்டு சமீபத்தில் விடுவிக்கப்பட்ட ஈரான் எண்ணெய் கப்பல் துருக்கி நோக்கி செல்வதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.
துபாய்: 

ஐரோப்பிய ஆணையத்தின் தடையை மீறி சிரியாவுக்கு கச்சா எண்ணெய் ஏற்றி சென்றதாக கூறி ஈரானின் எண்ணெய் 
கப்பலை ஸ்பெயின் நாட்டின் ஜிப்ரால்டர் ஜலசந்தி அருகே இங்கிலாந்து கடற்படை இரு மாதங்களுக்கு முன்பு கைப்பற்றியது. சமீபத்தில் இந்த கப்பல் விடுவிக்கப்பட்டது.

இந்நிலையில், அட்ரியன் தர்யா எனப்படும் இந்த ஈரானிய எண்ணெய்க் கப்பல் துருக்கியில் உள்ள முக்கிய எண்ணெய் 
முனையமான மெர்சின் துறைமுகம் நோக்கி செல்வதாக அதன் தானியங்கி அடையாள அமைப்பு தரவு தளத்தில் தெரிவித்துள்ளது. 

130 மில்லியன் டாலர் மதிப்புள்ள 2.1 மில்லியன் பீப்பாய்கள் ஈரானிய கச்சா எண்ணெயைக் கொண்டு செல்லும் அட்ரியன் தர்யா கப்பலின் இந்த தகவலை ஈரானிய அரசு அதிகாரிகளும், ஊடகங்களும் உறுதி படுத்தவில்லை. 

கப்பல் கண்காணிப்பு வலைத்தளம், அட்ரியன் தர்யா சிசிலிக்கு தெற்கே மத்திய தரைக்கடல் பகுதி கடலில் உள்ளது என 
கண்டறிந்துள்ளது. தற்போதைய வேகத்தில், அட்ரியன் தர்யா ஒரு வாரத்தில் துருக்கியின் மெர்சின் நகரை அடையும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது. ஆனால் அங்குதான் செல்லும் என்பது உறுதிப்படுத்தப்படவில்லை.

மெர்சின் துறைமுகம் சிரியாவின் பனியாஸ் நகரில் இருந்து 200 கி.மீ தொலைவில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஈரான் எண்ணெய் கப்பலுக்கு யாராவது உதவினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி மைக் பாம்பியோ, 3 தினங்களுக்கு முன்பு கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News