உள்ளூர் செய்திகள்
காய்கறிகள் தேக்கம்

தொடர் விடுமுறையால் விற்பனை மந்தம்- கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறிகள் தேக்கம்

Published On 2022-04-16 08:37 GMT   |   Update On 2022-04-16 08:37 GMT
கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறிகள் தேக்கமடைந்து உள்ளதால் மொத்த மற்றும் சில்லரை வியாபாரிகள் பெரிதும் கவலை அடைந்துள்ளனர்.
போரூர்:

சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகள், ஆந்திரா, கர்நாடகா, கேரளா, உத்தரபிரதேசம், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் இருந்து தினசரி காய்கறிகள் விற்பனைக்கு வருகிறது.

இன்று 420 லாரிகளில் காய்கறிகள் விற்பனைக்கு குவிந்துள்ளது. தொடர் விடுமுறை காரணமாக கடந்த 2 நாட்களாகவே மார்கெட்டுக்கு வரும் சில்லரை வியாபாரிகள் மற்றும் காய்கறிகள் கடைக்காரர்களின் வரத்து பாதியாக குறைந்துவிட்டது. இதன் காரணமாக காய்கறி விற்பனை மந்தமாகவே நடைபெற்று வருகிறது.

விற்பனை பாதிக்கப்பட்டு மூட்டை மூட்டையாக காய்கறிகள் தேக்கமடைந்து உள்ளதால் மொத்த மற்றும் சில்லரை வியாபாரிகள் பெரிதும் கவலை அடைந்துள்ளனர்.

தக்காளி விலை உயர்வு குறித்து மொத்த வியாபாரி ஜாபர் அலி சேட் கூறியதாவது:-

கோயம்பேடு மார்க்கெட்டுக்கு இன்று 55 லாரிகளில் தக்காளி விற்பனைக்கு வந்துள்ளது. கடந்த வாரம் ரூ.110-க்கு விற்ற முதல் ரக தக்காளி பெட்டி (14 கிலோ) இன்று ரூ.250-க்கு விற்கப்படுகிறது. தென் மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழை காரணமாக அந்த பகுதிகளில் தக்காளி உற்பத்தி பாதிக்கப்பட்டு உள்ளது.

இதன் காரணமாக அந்த பகுதிகளில் உள்ள வியாபாரிகள் ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் தற்போது அதிகளவில் தக்காளியை கொள்முதல் செய்து வருகின்றனர். இதன் காரணமாகவே தக்காளி விலை அதிகரித்து உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

கடந்த வாரம் மொத்த விற்பனை கடைகளில் ஒரு கிலோ ரூ.9-க்கு விற்ற தக்காளி விலை அதிகரித்து ரூ.18-க்கு விற்கப்படுகிறது. சில்லரை கடைகளில் தக்காளி ஒரு கிலோ ரூ.25-க்கு விற்கப்படுகிறது. ஒரு கிலோ ரூ.15-க்கு விற்ற நாசிக் வெங்காயம் விலை குறைந்து ரூ.11-க்கும், ஒரு கிலோ ரூ.20-க்கு விற்ற முருங்கைக்காய் ரூ.15-க்கும் விற்கப்படுகிறது.

அதேபோல் நூக்கல், புடலங்காய், சுரக்காய், பீர்க்கங்காய் உள்ளிட்ட காய்கறிகள் ஒரு கிலோ ரூ.10-க்கு விற்கப்படுகிறது.


Tags:    

Similar News