செய்திகள்
பாஜக வேட்பாளர் பிரியங்கா

பவானிபூர் வேட்பாளர் அறிவிப்பு- மம்தா பானர்ஜிக்கு கடும் நெருக்கடி கொடுக்க காத்திருக்கும் பாஜக

Published On 2021-09-10 12:26 GMT   |   Update On 2021-09-10 12:26 GMT
பாபுல் சுப்ரியோவின் சட்ட ஆலோசகராக செயல்பட்ட பிரியங்கா, சட்டப்பேரவை தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வேட்பாளரிடம் தோல்வி அடைந்தார்.
கொல்கத்தா:

மேற்கு வங்காளத்தில் காலியாக இருக்கும் பவானிபூா் உள்பட 3 தொகுதிகளுக்கு வரும் 30 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.  பவானிபூர் தொகுதியில் முதல் மந்திரி மம்தா பானர்ஜி, ஜாங்கிபூர் தொகுதியில் ஜாகீர் ஹூசைன், சாம்செர்கஞ்ச் தொகுதியில் அமிருல் இஸ்லாம் ஆகியோர் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடுகின்றனர். மம்தா பானர்ஜி இன்று வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

இந்நிலையில், பவானிபூர் தொகுதி இடைத்தேர்தலில் மம்தாவுக்கு எதிராக வழக்கழிஞர் பிரியங்கா திப்ரவாலை பாஜக களமிறக்கியுள்ளது. முன்னாள் மத்திய மந்திரி பாபுல் சுப்ரியோவின் சட்ட ஆலோசகராக செயல்பட்ட பிரியங்கா, ஏப்ரல், மே மாதங்களில் நடைபெற்ற மேற்குவங்காள சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட்டு திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வேட்பாளரிடம் தோல்வி அடைந்தார். 



பவானிபூர் தவிர மற்ற இரண்டு தொகுதிகளான சாம்செர்கஞ்ச், ஜாங்கிபூர் தொகுதிகளுக்கும் பாஜக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர். சாம்செர்கஞ்ச் தொகுதியில் மிலன் கோஷ், ஜாங்கிபூரில் சுஜித் தாஸ் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

மேற்கு வங்காளத்தில் ஆட்சியைப் பிடிக்கும் முயற்சியில் திரிணாமுல் காங்கிரசிடம் தோற்ற பாஜக, இடைத்தேர்தலில் மம்தா பானாஜிக்கு கடும் நெருக்கடி கொடுக்க திட்டமிட்டுள்ளது. 

மம்தாவுக்கு எதிராக தீவிர களப்பணி மேற்கொள்வதற்காக, 8 எம்எல்ஏக்களை தேர்தல் பார்வையாளர்களாக நியமித்து, ஆளுக்கு ஒரு வார்டை ஒதுக்கி உள்ளது. பாஜகவின் முக்கிய தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான அர்ஜுன் சிங் முழு தொகுதிக்கும் பார்வையாளராக நியமிக்கப்பட்டுள்ளார். ஜோதிர்மாய் சிங் மகதோ மற்றும் சவுமித்ரா கான் ஆகியோர் இணை பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். மாநில பாஜக பொதுச் செயலாளர் சஞ்சய் சிங், தேர்தல் பொறுப்பாளராகவும், சங்கர் சிக்தர், சோம்நாத் பானர்ஜி மற்றும் அக்னிமித்ரா பால் ஆகியோர் இணை பொறுப்பாளர்களாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். 

Tags:    

Similar News