லைஃப்ஸ்டைல்
வளர்ச்சியை தூண்டும் ஹார்மோன்

வளர்ச்சியை தூண்டும் ஹார்மோன்

Published On 2019-08-03 07:38 GMT   |   Update On 2019-08-03 07:38 GMT
மரபு தவிர, ஒருவரின் வளர்ச்சியைத் தீர்மானிப்பது, அவரது பிட்யூட்டரி சுரப்பியிலிருந்து சுரக்கும் வளர்ச்சி ஹார்மோன்.
ஒருவரின் வளர்ச்சி, அவர் கருவாக தன் தாயின் கர்ப்பத்தில் இருக்கும்போது ஆரம்பிப்பது. பொதுவாகக் கருவில் வளரும் குழந்தை 17 முதல் 20 அங்குலம் வரை வளரலாம்.

மரபு தவிர, ஒருவரின் வளர்ச்சியைத் தீர்மானிப்பது, அவரது பிட்யூட்டரி சுரப்பியிலிருந்து சுரக்கும் வளர்ச்சி ஹார்மோன். இந்தச் சுரப்பி, மூளையின் மத்தியில் இருக்கும். நிலக்கடலை அளவிலிருக்கும் இது, மிக முக்கியமான ஒரு சுரப்பி. உடலின் பல்வேறு சுரப்பிகளின் செயல்பாட்டை இது கட்டுப்படுத்துகிறது. இது சுரக்கும் ஹார்மோன்தான் ஒருவரை வளரச் செய்கிறது; உடலில் உள்ள திசுக்கள் மற்றும் எலும்புகளின் வளர்ச்சிக்குக் காரணமாக இருக்கிறது. இந்த வளர்ச்சி ஹார்மோனின் சுரப்பு குறைவதற்கும் கூடுவதற்கும் பிட்யூட்டரி சுரப்பியில் ஏற்படும் கட்டிகள், கிருமித் தாக்குதல், வளர்சிதை மாற்றங்கள் ஆகியவை காரணங்களாகலாம்.

முதற்கட்ட வளர்ச்சி, குழந்தை பிறந்ததிலிருந்து 12 வயதுவரை நிகழும். இந்தப் பருவத்தில் பல் விழுந்து முளைப்பது, எலும்புகள் கூடுவது என சீரான வளர்ச்சி நடைபெறும். இரண்டாம்கட்ட வளர்ச்சி, ஆணுக்கும் பெண்ணுக்கும் 13 வயதில் ஆரம்பித்து 18 வயதுவரை இருக்கும். சிலருக்கு அதிகபட்சமாக 23 வயதுவரை வளர்ச்சி இருக்கலாம். இந்தக் காலகட்டத்தில் வளர்ச்சி ஹார்மோன்கள் அபரிமிதமாக இருக்கும். இந்த இளம் வயதில்தான் உறுப்புகளின் வளர்ச்சியும் அதிகமாக இருக்கும். இந்தக் காலகட்டத்தில் வளர்ச்சியை ஊக்குவிக்க புரதம் அதிகமுள்ள முட்டை, சோயா, பருப்புகள், பயறு உள்ளிட்ட உணவுகளை அதிகமாக கொடுக்கலாம்.

ஊட்டச்சத்து பானங்கள் ஒருவரின் உயர நிர்ணயத்தில் எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தாது. உயரத்தை இதுபோன்ற புறக்காரணிகளால் கூட்டவோ, குறைக்கவோ முடியாது. மரபும், 12 வயதிலிருந்து 18 வயதுவரை கொடுக்கக்கூடிய புரதம் அதிகம் உள்ள உணவுகளுமே குழந்தைகளின் வளர்ச்சிக்குக் காரணமாக அமையும். வளர்ச்சி ஹார்மோன்களில் எந்த பாதிப்பும் இல்லாதபட்சத்தில், அவர்களின் வளர்ச்சி முழுமையடையும். சில குழந்தைகளுக்கு பிட்யூட்டரி சுரப்பியில் ஏற்படும் பிரச்சினையால் ‘ட்வார்பிசம்’ ஏற்பட வாய்ப்பிருக்கிறது. ட்வார்பிசம் என்பது குள்ளமாக இருப்பது.

உயரம் குறைந்த குழந்தைகளுக்குத் தாழ்வு மனப்பான்மை ஏற்படலாம். அவர்களுக்குப் பெற்றோரின் அரவணைப்பும் நம்பிக்கை தரும் வார்த்தைகளும் அவசியம். தேவைப்படும் சூழலில் அவர்களை கவுன்சலிங் அழைத்துச் செல்லலாம். பெற்றோர்கள், குழந்தைகளிடம் உயரத்தால் சமூக வாழ்க்கையில் எந்த மாற்றமும் ஏற்படாது என்பதைச் சொல்லிப் புரியவைக்க வேண்டும். உயரம் குறித்து கவலைப்படாமல் சாதித்த தன்னம்பிக்கை மனிதர்களின் கதைகளைச் சொல்லி அவர்களுக்கு நம்பிக்கை ஊட்டலாம். குழந்தைகளிடம், அவர்கள் தங்களைப் பிறரோடு ஒப்பீடு செய்து பார்ப்பதைத் தவிர்க்கச் சொல்லி தம்மைத் தாமே உயர்வாக நினைக்கும் பழக்கத்தை ஏற்படுத்த வேண்டும்.
Tags:    

Similar News