செய்திகள்
ராஜ்நாத்சிங்

இந்தியாவின் ஒரு அங்குல நிலத்தைக்கூட எந்த சக்தியாலும் கைப்பற்ற முடியாது - ராஜ்நாத்சிங்

Published On 2020-10-21 20:15 GMT   |   Update On 2020-10-21 20:15 GMT
இந்தியாவின் ஒரு அங்குல நிலத்தைக்கூட எந்த சக்தியாலும் கைப்பற்ற முடியாது என்று பீகார் தேர்தல் பிரசாரத்தில் ராஜ்நாத்சிங் கூறினார்.
பாட்னா:

பீகார் மாநில சட்டசபை தேர்தலையொட்டி, பராரா என்ற இடத்தில் நேற்று தேர்தல் பிரசார கூட்டம் நடைபெற்றது. அதில், பா.ஜனதா வேட்பாளருக்கு ஆதரவாக ராணுவ மந்திரி ராஜ்நாத்சிங் கலந்து கொண்டு பேசினார்.

அவர் பேசியதாவது:-

சீனாவுடனான எல்லை கோடு அருகே கிழக்கு லடாக்கில் உள்ள நிலவரம் பற்றியோ, ராணுவத்தின் வியூகம் பற்றியோ நான் எந்த தகவல்களையும் தெரிவிக்க முடியாது.

ஆனால், நமது ராணுவத்தின் துணிச்சலை அறிந்தால், நீங்கள் கைதட்டுவது மட்டுமின்றி, மகிழ்ச்சியில் துள்ளிக் குதிப்பீர்கள். அந்த அளவுக்கு அற்புதமான பணியை ராணுவம் செய்துள்ளது. அந்த அற்புதமான பணிக்காக நமது வீரர்களுக்கு எல்லோரும் எழுந்து நின்று மரியாதை செலுத்துவோம்.

பிரதமர் மோடியின் வலிமையான தலைமை இருக்கும்போது, இந்தியாவின் ஒரு அங்குல நிலத்தைக்கூட எந்த சக்தியாலும் கைப்பற்ற முடியாது.

ஆனால், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் ஆட்சியில் இருந்திருந்தால், இரண்டு, மூன்று நாட்களில் சீன படைகளை துரத்தி அடித்திருப்போம் என்று கூறுகிறார். அவர் கடந்த கால காங்கிரஸ் அரசுகளின் செயல்பாடுகளை முதலில் பார்க்க வேண்டும்.

1962-ம் ஆண்டு என்ன நடந்தது? நான் அப்போதைய பிரதமரை பற்றி எதுவும் தெரிவிக்க விரும்பவில்லை. இருப்பினும், அந்த ஆண்டின் வரலாற்றை படிக்குமாறு இளைஞர்களை கேட்டுக்கொள்கிறேன்.

பொய் சொல்லி ஆதரவு திரட்ட நான் விரும்பவில்லை. ஆனால், காங்கிரஸ்தான் பொய்களை பரப்பி வருகிறது. மக்களை தவறாக திசைதிருப்புவதற்கு பதிலாக, மக்களின் கண்களை பார்த்து உண்மையை பேசி அரசியல் செய்யுமாறு ராகுல் காந்தியை கேட்டுக்கொள்கிறேன். நம்பகத்தன்மைதான், அரசியலில் மிக அவசியமான சொத்து.

இவ்வாறு ராஜ்நாத்சிங் பேசினார்.
Tags:    

Similar News