உள்ளூர் செய்திகள்
பழனி இடும்பன் குளத்தில் ஆபத்தை உணராமல் தடுப்பு வேலிகளை தாண்டி குளிக்கும் பக்தர்கள்

பழனியில் பக்தர்கள் வருகை அதிகரிப்பு

Published On 2022-01-11 08:29 GMT   |   Update On 2022-01-11 08:29 GMT
பழனியில் நாளை தைப்பூச கொடியேற்றம் நடைபெறுவதால் பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளது
பழனி, ஜன:

பழனியில் பிரசித்தி பெற்ற தைப்பூசத்திருவிழா நாளை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இந்நிலையில் வருகிற 14ந் தேதி முதல் 18ந் தேதி வரை வழிபாட்டு தலங்கள் அடைக்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

வழிபாட்டு தலங்களுக்கு தடை அமலுக்கு வர இன்னும் 2 நாட்கள் மட்டுமே உள்ளதால் பழனி முருகனை தரிசிக்க பல்வேறு ஊர்களில் இருந்து பக்தர்கள் கூட்டம் கூட்டமாக வந்த வண்ணம் உள்ளனர்.
நேற்று அதிகபட்சமாக சுமார் 2 லட்சம் பக்தர்கள் பழனியில் சாமி தரிசனம் செய்தனர். சுமார் 4 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்த நிலையில் இன்றும் தொடர்ந்து பாதயாத்திரையாகவும், பஸ்கள் மூலமும் பக்தர்கள் பழனி நோக்கி வந்த வண்ணம் உள்ளனர்.

இந்நிலையில் தைப்பூசத் திருவிழா கொடியேற்றம் நாளை நடைபெறும் நிலையில் அதில் பக்தர்கள் பங்கேற்க அனுமதி கிடைக்குமா? என்ற அறிவிப்பு இது வரை கோவில் நிர்வாகம் சார்பில் வெளியிடப்படவில்லை.

மேலும் திருக்கல்யாணம், தேரோட்டம் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெறுமா? அதில் பக்தர்கள் பங்கேற்க அனுமதி கிடைக்குமா? என்ற அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. 18ந் தேதி வரை வழிபாட்டுத் தலங்கள் மூடப்பட்டு இருக்கும் என்று அரசு அறிவித்துள்ளது.

அன்றைய தினம்தான் தேரோட்டம் நடைபெறுகிறது. எனவே இதில் உள்ளூர் பக்தர்கள் மட்டும் பங்கேற்க அனுமதி வழங்கப்படுவார்களா? அல்லது  கோவில் நிர்வாகிகள் மட்டும் கலந்து கொள்வார்களா? என்ற அறிவிப்பும் தெரிவிக்கப்படவில்லை.

இதனால் தைப்பூசத்துக்கு முன்பாகவே பழனி கோவிலுக்கு சென்று விட வேண்டும் என்று லட்சக்கணக்கான பக்தர்கள் படையெடுத்து வருகின்றனர். இதனால் பழனியில் திரும்பிய திசையெல்லாம் பக்தர்கள் கூட்டம் வெள்ளம் போல் காணப்படுகிறது.
-
பழனி கோவிலுக்கு வரும் பக்தர்கள் சண்முக நதி மற்றும் இடும்பன் குளத்தில் நீராடி விட்டு முருகனை தரிசிக்க செல்வது வழக்கம். தற்போது இங்கு தண்ணீர் அதிக அளவில் உள்ளது. பக்தர்களும் ஏராளமானோர் நீராடி வருகின்றனர்.

திருவிழா காலங்களில் நீராடச் செல்லும் பக்தர்கள் தண்ணீரில் அடித்துச் செல் வதை தவிர்க்க தீயணைப்பு வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவது வழக்கம். ஆனால் தற்போது அங்கு எந்தவித பாதுகாப்பு வசதியும் செய்யப்படவில்லை.

இதனால் பக்தர்கள் தடுப்பு வேலிகளை தாண்டி குளத்தில் நீராடி வருகின்றனர். பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாததால் அசம்பாவிதம் ஏற்படுவதற்கு முன்பாக அங்கு உரிய முன்னேற்பாடுகள் செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
Tags:    

Similar News