செய்திகள்
அரசு போக்குவரத்து

திருப்பூரில் இருந்து தொலைதூர மாவட்டங்களுக்கு கூடுதல் பஸ்கள் - அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் தகவல்

Published On 2021-04-19 22:11 GMT   |   Update On 2021-04-20 15:03 GMT
நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வந்து கொண்டிருக்கிறது. இதன் காரணமாக தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மத்திய, மாநில அரசுகள் தீவிரப்படுத்தின.
திருப்பூர்:

தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு இன்று இரவு முதல் அமலுக்கு வர உள்ள நிலையில் தொலைதூர மாவட்டங்களுக்கு அதிகாலையில் இருந்தே கூடுதல் பஸ்கள் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக அரசு போக்குவரத்துத்துறை திட்டமிட்டுள்ளது.

நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வந்து கொண்டிருக்கிறது. இதன் காரணமாக தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மத்திய, மாநில அரசுகள் தீவிரப்படுத்தின. இதன் பின்னரும் கொரோனா தொற்று கட்டுப்பாட்டிற்குள் வராமல் புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. இதனால் புதிய கட்டுப்பாடுகளை தமிழக அரசு அறிவித்தது.

அதன்படி இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் வருகிற 30-ந் தேதி வரை இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டது. மேலும், இந்த நேரத்தில் பொது போக்குவரத்திற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் அரசு மற்றும் தனியார் பஸ்கள் அதிகாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை மட்டுமே இயங்கும்.

தொழில் நகரமான திருப்பூரில் இருந்து வெளிமாவட்டங்களுக்கு தினமும் 300-க்கும் மேற்பட்ட பஸ்கள் சென்று கொண்டிருக்கின்றன. தற்போது விதிக்கப்பட்டுள்ள புதிய கட்டுப்பாட்டின் காரணமாக அதிகாலை 4 மணியில் இருந்து தொலைதூர மாவட்டங்களான நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களுக்கு அதிகளவு பஸ்கள் இயக்கப்பட இருக்கிறது. இதுபோல் சற்று அருகில் உள்ள மாவட்டங்களுக்கு சேலம், திருச்சி, மதுரை உள்ளிட்ட பகுதிகளுக்கு சீரான இடைவெளியிலும், கூட்டத்தின் அடிப்படையிலும் பஸ்கள் இயக்கப்பட இருக்கிறது.

அனைத்து பஸ்களும் இரவு 10 மணிக்குள் சம்பந்தப்பட்ட பகுதிகளுக்கு சென்றடையும் வகையில் அனுப்ப போக்குவரத்துத்துறை அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். இதுபோல் கோவை, ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களுக்கு செல்வதற்கு திருப்பூரில் இருந்து ஒரு மணி நேரம் ஆகும் என்பதால், அதிகபட்சம் திருப்பூரில் இருந்து இரவு 8 மணி வரை பஸ்கள் இயக்கப்பட வாய்ப்புள்ளது.
Tags:    

Similar News