உள்ளூர் செய்திகள்
கீற்று முடையும் தொழில்

நலிவடைந்து வரும் கீற்று முடையும் தொழில் - நிவாரணத்தை எதிர்பார்க்கும் தொழிலாளர்கள்

Published On 2022-01-12 12:16 GMT   |   Update On 2022-01-12 12:16 GMT
தென்னை மரங்களில் இருந்து உதிர்ந்து விழும் மட்டைகளை சேகரித்து, தண்ணீரில் ஊறவைத்து பதப்படுத்தும் கூலித்தொழிலாளர்கள், தென்னங்கீற்று முடைந்து விற்பனை செய்கின்றனர்.
தென்னை மரங்களில் இருந்து உதிர்ந்து விழும் மட்டைகளை சேகரித்து, தண்ணீரில் ஊறவைத்து பதப்படுத்தும் கூலித்தொழிலாளர்கள், தென்னங்கீற்று முடைந்து விற்பனை செய்கின்றனர். வாழப்பாடி பகுதியில் இத்தொழில் பல நூறாண்டாக தொடர்ந்து வருவதால், இப்பகுதியில் பாரம்பரிய கைத்தொழில்களின் ஒன்றாக தொடர்ந்து வருகிறது.

சேலம் மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்து மட்டுமின்றி, ஈரோடு மாவட்டத்தில் இருந்தும் தென்னை மட்டைகளை எண்ணிக்கை அடிப்படையில் விவசாயிகளிடம் கொள்முதல் செய்யும் கீற்று வியாபாரிகள், கூலித்தொழிலாளர்களை கொண்டு கீற்று முடைந்து கடலோர மாவட்டங்களுக்கு அனுப்பி வருகின்றனர்.

சிதம்பரம், விழுப்புரம், பெரம்பலூர், அரியலூர், கடலூர், சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட பல மாவட்டங்களுக்கு, வாழப்பாடி பகுதியில் இருந்து தென்னங்கீற்றுகள் விற்பனைக்கு செல்கிறது.

கடலோர கிராமங்களில் குடிசை வீடுகள் அமைக்கவும், ஆடு, மாடு, கோழி போன்ற கால்நடை வளர்ப்பு கொட்டகைகளின் மேற்கூரை வேய்வதற்கும், மாநாடு, விழாக்கால பந்தல்கள், கூடாரங்கள், சினிமா செட்டிங் அமைப்பதற்கும் தென்னங்கீற்றுகள் பயன்படுத்தப்படுகின்றன.

வாழப்பாடி பகுதியில் பொன்னாரம்பட்டி, வெள்ளாளப்பட்டி, செக்கடிப்பட்டி, இடையப்பட்டி உள்ளிட்ட ஏராளமான கிராமங்களில், ஆண்டு முழுவதும் வேலைவாய்ப்பு கிடைத்து வந்ததால், கீற்று முடையும் தொழிலை நம்பி 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பிழைப்பு நடத்தி வந்தனர்.

நாளொன்றுக்கு 200 கீற்று முடையும் பெண் தொழிலாளர்களுக்கு, ரூ.300, பாரமேற்றும் ஆண் தொழிலாளர்களுக்கு ரூ.500 வரையும் கூலியாக கிடைத்து வந்தது.

புயல் மற்றும் மழையில் அடிக்கடி சேதமடைந்து போவதாலும், எளிதில் தீப்பற்றிக்கொள்வதாலும், தென்னங்கீற்று கூரை வேய்வதற்கு போதிய தொழிலாளர்கள் கிடைக்காததாலும், சமீப காலமாக, தென்னங்கீற்று பயன்பாடு படிப்படியாக குறைந்து வருகிறது. இந்நிலையில், தென்னங்கீற்று முடையும் கைத்தொழிலை கற்றுக்கொள்ளவும், இத்தொழிலில் ஈடுபடவும் இளையத் தலைமுறை தொழிலாளர்கள் ஆர்வம் காட்டாததாலும், உள்ளூரில் தரமான தென்னை மட்டைகள் கிடைக்காததாலும் பாரம்பரிய கைத்தொழில்களின் ஒன்றான கீற்று முடையும் தொழில் நலிவடைந்து வருகிறது.

எனவே, தென்னங்கீற்று முடையும் தொழிலாளர்களுக்கு தொழிலாளர் நல வாரியத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கவும், இத்தொழிலில் ஈடுபட்டு வரும் விவசாயிகள், வியாபாரிகளுக்கு அரசு மானியத்துடன் கடனுதவி வழங்கவும், மழை, புயல் தருணத்தில் தொழில் பாதிக்கப்படும் போது உரிய நிவாரணம் வழங்கவும் தமிழக அரசு முன்வர வேண்டுமென தொழிலாளர்கள், வியாபாரிகளிடையே கோரிக்கை எழுந்துள்ளது.

இதுகுறித்து, தென்னங்கீற்று விற்பனைத்தொழில் செய்து வரும் பொன்னாரம்பட்டியை சேர்ந்த பெண் வியாபாரி கலைச்செல்வி ஜீவா கூறுகையில்,

10 ஆண்டுக்கும் மேலாக தென்னங்கீற்று முடைந்து விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறேன். குறைந்த விலைக்கு நீடித்து உழைக்கும் நெகிழி, சிமெண்ட் மற்றும் தகர ஆட்டைகள் விற்பனைக்கு வந்து விட்டதால், சமீப காலமாக கடலோர பகுதிகளிலும் கூரை வேய்வதற்கு தென்னங்கீற்று பயன்படுத்துவது குறைந்து போனது.

இளையத் தலைமுறையினர் தென்னங்கீற்று முடையும் கைத்தொழிலை தவிர்த்து வருவதால், தொழிலாளர்கள் பற்றாக்குறை ஏற்பட்டு இத்தொழில் நலிவடைந்து வருகிறது. இதுமட்டுமின்றி, புயல், மழை தருணத்திலும் இத்தொழில் பாதிக்கப்படுகிறது. கடந்தாண்டு இறுதியில் பருவமழை பெய்த தருணத்தில் தொழில் அடியோடு முடங்கியதால் பெரும் இழப்பு ஏற்பட்டது. எனவே, கிராமப்புற பாரம்பரிய கைத்தொழில்களின் ஒன்றான இத்தொழிலை காக்க, தமிழக அரசு மானியக் கடனுதவி, நலத்திட்ட உதவிகள், நிவாரணம் வழங்கிட முன்வர வேண்டும் என்றார்.
Tags:    

Similar News