ஸ்லோகங்கள்
நித்ய தேவிகள்

நிம்மதியான வாழ்வருளும் 5 நித்ய தேவிகளின் மந்திரங்கள்

Published On 2022-02-16 07:02 GMT   |   Update On 2022-02-16 07:02 GMT
குறிப்பிட்ட திதியை பரிபாலனம் செய்யும் தேவிகளை வழிபட்டால் வறுமை உள்ளிட்ட சங்கடங்களில் இருந்தும் விடுதலை பெறலாம். இங்கே 5 நித்ய தேவிகளைப் பற்றிய விவரங்களை சிறு குறிப்பாக பார்க்கலாம்.
லலிதா பரமேஸ்வரியை ஸ்ரீ சக்கர ரூபத்தில் வழிபடும் முறை ‘ஸ்ரீவித்யை’ எனப்படும். அந்த தேவியின் அம்ருத கலைகள், பதினைந்து பாகங் களாகப் பிரிந்து, ஒவ்வொரு கலையும் ஒவ்வொரு தேவியாக உருவம் பெற்று பதினைந்து நித்யா தேவிகளாக, லலிதா பரமேஸ்வரியை சுற்றி வீற்றிருந்து அருள்வதாக சொல்லப்படுகிறது. ஒவ்வொரு மாதமும் தேய்பிறை எனப்படும் கிருஷ்ண பட்சம் (அமாவாசையுடன் சேர்த்து 15 நாட்கள்), வளர்பிறை எனப்படும் சுக்ல பட்சம் (பவுர்ணமியுடன் சேர்த்து 15 நாட்கள்) என இரண்டாக பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு பட்ச பதினைந்து நாட்களில் பதினைந்து திதி நித்யாக்களும் ஒவ்வொரு பட்சத்திற்கும் ஒருநாள் அதிபதிகளாக வருவார்கள். ஒரு மாதத்தின் இரு நாட்களில் பிரபஞ்சத்தை நிர்வாகம் செய்கின்றனர். குறிப்பிட்ட திதியை பரிபாலனம் செய்யும் தேவிகளை வழிபட்டால் வறுமை உள்ளிட்ட சங்கடங்களில் இருந்தும் விடுதலை பெறலாம்.

இங்கே 5 நித்ய தேவிகளைப் பற்றிய விவரங்களை சிறு குறிப்பாக பார்க்கலாம்.

மஹா வஜ்ரேஸ்வரி

இந்த தேவி ஜாலாமந்திரி பீடத்தின் அதி தேவதை. லலிதாதேவி உறையும் ஸ்ரீநகரத்தின் பன்னிரண்டாம் மதில் சுற்று, வஜ்ரமணியால் ஆனது என்றும், அதன் அருகில் வஜ்ரமயமான நதி ஒன்று உள்ளது என்றும், அதற்கெல்லாம் அதி தேவதை வஜ்ரேஸ்வரி என்றும், துர்வாச முனிவர் தன்னுடைய லலிதாஸ்தரத்னத்தில் குறிப்பிட்டுள்ளார். இத்தேவி வஜ்ரம் என்ற ஆயுத ரூபமாகவும் இருக்கிறாள். தங்கப் படகில் தன் பக்தரைக் காக்க விரைந்து வருவாள். நான்கு கரங்கள் கொண்ட இந்த அன்னை, செந்நிற பூக்களால் ஆன மாலையை அணிந்தவள். வைடூரியம் பதித்த கிரீடம், கைகளில் பாசம், அங்குசம், கரும்பு- வில், மாதுளம் கனி தரித்து, கனிவான பார்வையுடன் தம் பக்தர்களை பார்க்கிறாள். இந்த அன்னையை வழிபாடு செய்தால் அனைத்து துன்பங்களில் இருந்தும் விடுதலை கிடைக்கும்.

வழிபட வேண்டிய திதிகள்:- வளர்பிறை சஷ்டி, தேய்பிறை தசமி

மந்திரம்:-

ஓம் மஹா வஜ்ரேஸ்வர்யை வித்மஹே
வஜ்ர நித்யாயை தீமஹி
தன்னோ நித்யா ப்ரசோதயாத்

சிவதூதி

சிவபெருமானையே தூதாக அனுப்பியவள் இந்த தேவி. சும்பன் மற்றும் நிசும்பன் ஆகியோருடன் போரிட அம்பிகை முடிவு செய்தாள். போர் தொடங்குவதற்கு முன்பாக ஒரு முறை அந்த அசுரர்களிடம் சிவபெருமானை தூதாக அனுப்பியதாக தேவி மகாத்மியத்தில் கூறப்பட்டுள்ளது. எட்டுத் திருக்கரங்கள், மூன்று கண்கள் கொண்ட இந்த அம்பிகையின் திருமுகம், கோடை காலத்து சூரிய ஒளிபோல் மின்னும். நவரத்தினங்கள் இழைத்த மகுடமும், பட்டாடையும் இவளது அழகுக்கு அழகு செய்வன. தன் திருக்கரங்களில் கேடயம், அரிவாள், ஷாஷகா எனும் கோப்பை, பாசம், அங்குசம், கட்கம், கதை, தாமரை ஆகியவற்றை ஏந்தி அழகுடன் மிளிர்கிறாள். எல்லாவிதமான மங்களங் களையும் அன்பர்களுக்கு அளிப்பவள். இந்த தேவியை வழிபட்டு வந்தால், நமக்கு எதிராக நடைபெறும் அநீதியும், அதர்மமும் அழியும். நியாயமான கோரிக்கைகள் எளிதாக நிறைவேறும். ஆபத்து நெருங்காது.

வழிபட வேண்டிய திதிகள்:- வளர்பிறை சப்தமி, தேய்பிறை நவமி

மந்திரம்:-

ஓம் சிவதூத்யை வித்மஹே
சிவங்கர்யை தீமஹி
தன்னோ நித்யா ப்ரசோதயாத்

த்வரிதா

இந்த தேவிக்கு ‘தோதலா தேவி’ என்ற பெயரும் உண்டு. பக்தர்களுக்கு சீக்கிரமாய் அருள்பாலிப்பதால் ‘த்வரிதா’ என்று வணங்கப்படுகிறாள். தழைகளை ஆடையாக அணிந்தவள். தன்னுடைய உடலில் எட்டு நாகங்களை சூடியிருப்பாள். கருநீல நிறமான இவள், முக்கண்களுடனும், நான்கு கரங்களோடும் புன்முறுவல் பூத்த திருமுகத்துடன் அருள்கிறாள். சலங்கை, இடை மேகலை, ரத்ன ஆபரணங்களுடன், மயில் பீலிகளைச் சூடிக்கொண்டு அலங்கார ரூபமாக தரிசனம் தருகிறாள். தேவியின் வரத அபய ஹஸ்தங்கள் பக்தர்களைக் காக்கக் காத்திருக்கின்றன. இத்தேவியை வணங்கு பவர்களுக்கு, அஷ்ட சித்திகளும், ஞானமும் கைகூடும். பயம் விலகும். கலைகளில் தேர்ச்சி பெறலாம். அதோடு பூரண ஆயுளும் கிடைக்கும்.

வழிபட வேண்டிய திதிகள்:- வளர்பிறை அஷ்டமி, தேய்பிறை அஷ்டமி

மந்திரம்:-

ஓம் த்வரிதாயை வித்மஹே
மஹாநித்யாயை தீமஹி
தன்னோ நித்யா ப்ரசோதயாத்

குலஸுந்தரி

குலஸுந்தரி என்பது குண்டலினி சக்தியை குறிக்கும். நம் சரீரமே குலம். அதை இயக்குபவள் இந்த தேவி. பன்னிரண்டு திருக்கரங்கள், தாமரை மலரைப் போன்ற மலர்ந்த ஆறு திருமுகங்கள், ஒவ்வொரு முகத்திலும் முக்கண்கள் கொண்டு தாமரை பீடத்தில் அமர்ந்து அருள்பவள். திருமேனி முழுவதும் திருவாபரணங்கள் இருக்க, கரங்களில் ஜெபமாலை, தாமரை, கமண்டலம், கோப்பை, மாதுளம்பழம், புத்தகம், எழுத்தாணி, சங்கு, வரத முத்திரை கொண்டு தரிசனம் அளிக்கிறாள். தேவர்களும், கந்தர்வர்களும், கின்னரர்களும் இவளைச் சுற்றி இருந்து அவள் புகழ் பாடிய வண்ணம் உள்ளனர். யட்சர்களும், அசுரர்களும் கூட இந்த அன்னையின் அருளை வேண்டி நிற்கின்றனர். இந்த தேவியை வழிபடுபவர்கள், சகல ஞானமும் பெறுவர். செல்வ வளமும், சொத்துக்களும் சேரும்.

வழிபட வேண்டிய திதிகள்:- வளர்பிறை நவமி, தேய்பிறை சப்தமி

மந்திரம்:-

ஓம் குலஸுந்தர்யை வித்மஹே
காமேஸ்வர்யை தீமஹி
தன்னோ சக்தி ப்ரசோதயாத்.

சர்வாத்மிகா

காலத்தைக் குறிப்பிடும் வடிவான தேவி இவள். ‘சர்வாத்மிகா’ என்ற திருநாமம் கொண்ட இத்தேவி பொருட்களை இயக்கும் சக்தியாய்த் திகழ்கிறாள். எங்கும் நிறைந்தவள். உதய நேரத்தில் இருக்கும் சூரியனின் நிறம் கொண்டு பிரகாசிப்பவள். மந்தகாசமான திருமுகத்தைக் கொண்டவள். பிரகாசமான மகுடம் தரித்து தன் திருக்கரங்களில் பாசம், அங்குசம், புத்தகம், ஜெபமாலை, புஷ்பபாணம், கரும்பு - வில், வாள், கேடயம், கபாலம், சூலம் ஏந்தி அபய -வரத முத்திரை தாங்கியிருப்பவள். கணக்கில்லாத சக்திகள் அவளை ஓர் முழுமையான வட்டவடிவில் சூழ்ந்துள்ளன. சவுந்தர்ய ரூபவதியான இவள், அன்பர்களின் மனதிற்கு இனியவள். மங்களங்கள் தருபவள். நீலகண்டனின் இதயத்தில் வாழ்பவள். இந்த தேவியை வழிபாடு செய்து வந்தால் தொல்லைகள் அனைத்தும் நீங்கும். தடைகள் விலகும். தோஷங்கள் அகலும். சகல சவுபாக்கியங்களும், ஐஸ்வரியங்களும் வந்தடையும்.

வழிபட வேண்டிய திதிகள்:- வளர்பிறை தசமி, தேய்பிறை சஷ்டி

மந்திரம்:-

ஓம் நித்யா பைரவ்யை வித்மஹே
நித்யா நித்யாயை தீமஹி
தன்னோ யோகிநி ப்ரசோதயாத்
Tags:    

Similar News