செய்திகள்
ஓட்டு போட வரிசையில் காத்திருந்த வாக்காளர்கள்

கர்நாடக இடைத்தேர்தல்- 15 சட்டசபை தொகுதிகளில் விறுவிறுப்பான ஓட்டுப்பதிவு

Published On 2019-12-05 08:54 GMT   |   Update On 2019-12-05 08:54 GMT
கர்நாடகாவில் இடைத்தேர்தல் நடைபெறும் 15 சட்டமன்றத் தொகுதிகளில் விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
  • கர்நாடகாவில் அதிருப்தி எம்எல்ஏக்கள் விலகியதால் குமாரசாமி ஆட்சி கவிழ்ந்தது. 
  • எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்டதால் காலியான 15 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல். 
  • 15 தொகுதிகளிலும் பா.ஜனதா - காங்கிரஸ் வேட்பாளர்கள் நேரடியாக மோதுகின்றனர். 


பெங்களூரு:

கர்நாடகத்தில் மதசார்பற்ற ஜனதாதளம் - காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடந்தபோது அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் 17 பேர் தங்களது பதவியை ராஜினாமா செய்தனர். ராஜினாமா கடிதங்களை அப்போதைய சபாநாயகர் ரமேஷ்குமார் ஏற்கவில்லை. 17 எம்.எல்.ஏ.க்களையும் தகுதிநீக்கம் செய்து உத்தரவிட்டார். இதன் காரணமாக குமாரசாமி ஆட்சி கவிழ்ந்தது. அதன்பின்னர் எடியூரப்பா தலைமையிலான பாஜக ஆட்சி பொறுப்பேற்றது.

இதற்கிடையே தகுதி நீக்கம் செய்யப்பட்ட 17 பேரும் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். 17 பேரின் தகுதிநீக்கம் செல்லும் என்றும், அவர்கள் இடைத்தேர்தலில் போட்டியிட தடை இல்லை என்றும் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.

இதைத்தொடர்ந்து 15 சட்டசபை தொகுதிகளுக்கு தேர்தல் நடத்த தேர்தல் கமி‌ஷன் உத்தரவிட்டது. அதன் படி சிவாஜி நகர், கே.ஆர்.புரம், அத்தானி, கோகாக், ஹரிகேசூர், ராணிபென்னூர், விஜயநகரா, ஓசக்கோட்டை, யஷ்வந்த் புரம், மகாலட்சுமி லே-அவுட், காகவாடா, எல்லாபுரா, கே.ஆர். பட்டை, ஹுன்சூர், சிக்பள்ளாபூர் ஆகிய 15 தொகுதிகளில் ஓட்டுப்பதிவு நடந்தது.

காலை 6 மணிக்கே வாக்காளர்கள் வரிசையில் நின்றிருந்தனர். 7 மணிக்கு ஓட்டுப்பதிவு தொடங்கியது. 

பல்வேறு தலைவர்கள் மற்றும் வேட்பாளர்கள் காலையிலேயே வாக்குச்சாவடிகளுக்கு சென்று ஓட்டு போட்டனர். ராணிபென்னூர் பாஜக வேட்பாளர் அருண் குமார், கொடியாலா ஹாஸ்பெட்டில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கை பதிவு செய்தார்.



இடைத்தேர்தலை முன்னிட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. பதட்டம் நிறைந்த வாக்கு சாவடிகளில் துணை ராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர். காலையில் சற்று மந்தமாக ஓட்டுப் பதிவு இருந்தது. அதன்பின்னர் ஓட்டுப்பதிவு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. 

முதல் இரண்டு மணி நேரங்களில் 6.6 சதவீத வாக்குகளே பதிவாகியிருந்தன. அதன்பின்னர் 11 மணிக்கு 17.6 சதவீதமாகவும், 12 மணி நிலவரப்படி 18.2 சதவீதமாகவும் உயர்ந்தது. வாக்காளர்கள் அதிக அளவில் வரிசையில் நின்றிருப்பதால் ஓட்டுப்பதிவு சதவீதம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

15 தொகுதிகளிலும் 165 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். 9 பேர் பெண்கள் ஆவார்கள். 15 தொகுதிகளிலும் பா.ஜனதா - காங்கிரஸ் வேட்பாளர்கள் நேரடியாக மோதுகின்றனர். மத சார்பற்ற ஜனதா தளம் இந்த தேர்தலில் தனித்து போட்டியிடுகிறது. 12 தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தி உள்ளது.

வருகிற 9-ந் தேதி ஓட்டுக்கள் எண்ணப்படும். அன்று பகல் 12 மணிக்கு பிறகு முன்னணி நிலவரம் தெரிய வரும்.

கர்நாடக சட்டசபையில் சபாநாயகரையும் சேர்த்து மொத்தம் 225 இடங்கள் உள்ளன. தற்போது பா. ஜனதாவுக்கு 105 எம்.எல்.ஏக்களும், காங்கிரசுக்கு 66 எம்.எல்..ஏ.க்களும், மதசார்பற்ற ஜனதா தளத்துக்கு 34 எம்.எல்.ஏக்களும் உள்ளனர். பகுஜன் சமாஜ் கட்சிக்கு ஒரு எம்.எல்.ஏ.வும், நியமன எம்.எல்.ஏ. ஒருவரும் சபாநாயகரும் உள்ளனர்.

பா.ஜனதா அரசுக்கு மெஜாரிட்டி கிடைக்க 112 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு தேவை. இதனால் 8 தொகுதிகளில் பா.ஜனதா வெற்றி பெற வேண்டும் என்ற கட்டாயத்தில் உள்ளது. 

8 தொகுதிகளில் வெற்றி பெற்றால் மட்டுமே பா.ஜனதா ஆட்சியை தக்க வைக்க முடியும். இல்லையென்றால் ஆட்சிக்கு ஆபத்து ஏற்படும். இதனால் 15 தொகுதிகளிலும் எடியூரப்பா 2 கட்டமாக பிரசாரத்தில் ஈடுபட்டார்.

தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் 13 பேருக்கு பா.ஜனதா சார்பில் சீட் கொடுத்து தேர்தலில் நிற்க வைத்துள்ளார்.

இந்த தேர்தல் முடிவு பா.ஜனதாவுக்கு எதிராக வந்தால் மீண்டும் மதசார்பற்ற ஜனதாதளத்துடன் இணைந்து கூட்டணி ஆட்சி அமைக்கப்போவதாக காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுனா கார்கே அறிவித்திருந்தார்.

அவரது கருத்தை வரவேற்று கூட்டணி ஆட்சி குறித்து பரிசீலிக்கப்போவதாக மதச்சார்பற்ற ஜனதாதள தலைவரும், முன்னாள் பிரதமருமான தேவேகவுடா மற்றும் அவரது மகனும் முன்னாள் முதல் மந்திரியுமான குமாரசாமி அறிவித்து இருந்தார்.

இதனால் மீண்டும் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் காங்கிரஸ் முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா, மாநில காங்கிரஸ் தலைவர் தினேஷ் குண்டுராவ் உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டனர்.

கடந்த முறை காங்கிரஸ் கூட்டணியில் இருந்த மத சார்பற்ற ஜனதா தளம் இந்த முறை தனித்து போட்டியிடுகிறது. இதனால் வாக்குகள் சிதறி பா.ஜனதாவுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் எடியூரப்பா உள்ளார்.
Tags:    

Similar News