செய்திகள்

பொன் மாணிக்கவேலுக்கு பதவி நீட்டிப்பு- சிலை கடத்தல் வழக்கில் முக்கிய பிரமுகர்கள் கலக்கம்

Published On 2018-12-01 09:11 GMT   |   Update On 2018-12-01 09:11 GMT
சிலை கடத்தல் வழக்குகளை தொடர்ந்து விசாரிக்க பொன் மாணிக்கவேலுக்கு ஒரு ஆண்டு பதவி நீட்டித்து ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளதால் முக்கிய பிரமுகர்கள் கலக்கம் அடைந்துள்ளனர். #statuesmuggling #ponmanickavel

சென்னை:

தமிழ்நாடு முழுவதும் நடந்த சிலை கடத்தல் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு பிரிவின் தலைமை அதிகாரியாக ஐ.ஜி. பொன் மாணிக்கவேலை நியமித்தது. கடந்த ஆண்டு ஜூலை 1-ந்தேதி ஐகோர்ட்டு உத்தரவிட்டது. சிலை கடத்தல் தொடர்பான வழக்குகளில் இதற்கு முன்பு பெயர் அளவில் தான் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது, கடத்தல் சம்ப வத்தில் ஈடுபட்டவர்களை மட்டுமே கைது செய்யப்பட்டனர். பின்னணியில் இருப்பவர்கள் பற்றி எந்த விவரமும் வெளியே தெரியாது.

ஆனால் பொன் மாணிக்கவேலின் அதிரடி விசாரணையில் சிலை கடத்தலுக்கு பின்னணியாக இருந்தவர்கள் பற்றிய விவரம் தெரியவந்தது. அமெரிக்கா, ஜெர்மனி, சுவிட்சர்லாந்து போன்ற வெளிநாடுகளுக்கு சிலைகள் கடத்தப்பட்டு இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.

இது தொடர்பாக அனைத்து வழக்குகளையும் அவரே நேரடி பார்வையில் விசாரணை மேற்கொண்டார்.

சிலை கடத்தல் தொடர்பாக சினிமா டைரக்டர் சேகர் கைதாகி இருந்தார். இதை தொடர்ந்து சினிமா பிரபலங்கள் மேலும் பலருக்கு இதில் தொடர்பு இருக்குமோ? என்ற சந்தேகம் ஏற்பட்டது. ஆனால் வேறு யாருக்கும் இதில் தொடர்பு இல்லாததால் மேல் நடவடிக்கை எடுக்கவில்லை.

சிலை கடத்தல் வழக்குகளில் போலீஸ் அதிகாரிகளையும், இந்து சமய அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் கவிதா, தமிழக அரசின் தலைமை ஸ்தபதி முத்தையா உள்பட முக்கிய பிரமுகர்கள் பொன் மாணிக்கவேல் தலைமையிலான தனிப்படை போலீசார் கைது செய்தனர். இது தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

சிலை கடத்தலில் முக்கிய பிரமுகர்களுக்கும், அரசியல்வாதிகளுக்கும் தொடர்பு இருப்பதாக கூறப்பட்டது. இதனால் இந்த வழக்கு மேலும் விஸ்வரூபமானது.

இதற்கிடையே சிலை கடத்தல் தொடர்பான வழக்குகளை பரிமாரிக் கொள்வதில் தமிழக அரசுக்கும், பொன் மாணிக்கவேலுக்கும் இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டது. இதை தொடர்ந்து சிலை கடத்தல் தொடர்பான வழக்குகளை சி.பி.ஐ.க்கு மாற்றி கடந்த ஆகஸ்டு 1-ந்தேதி தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. இதற்கு ஆகஸ்டு 6-ந்தேதி ஐகோர்ட்டு இடைக்கால தடை விதித்தது.

ஐ.ஜி. பொன்மாணிக்கவேல் நேற்று ஒய்வு பெற இருந்தார். இந்த நிலையில் சிலை கடத் தல் வழக்குகளை தொடர்ந்து விசாரிக்க அவருக்கு ஒரு ஆண்டு பதவி நீட்டித்து ஐகோர்ட்டு உத்தரவிட்டது. பொன்மாணிக்கவேலின் ஓய்வு நாளில் இந்த கவுரவத்தை ஐகோர்ட்டு அளித்தது. நேர்மையாக செயல்பட்ட அவருக்கு உரிய மரியாதை கிடைத்தது.

மேலும் சிலை கடத்தல் வழக்குகளை சி.பி.ஐ. விசாரிக்கவும் தடை விதிக்கப்பட்டது. இது தொடர்பாக தமிழக அரசு பிறப்பித்த அரசாணையும் ரத்து செய்து உத்தரவிட்டது.

இதற்கிடையே பொன் மாணிக்கவேலின் ஒய்வை தொடர்ந்து கூடுதல் டி.ஜி.பி. அபய்குமார் சிங் சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கு மாற்றப்பட்டார். அவர் நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார்.

ஆனாலும் பொன் மாணிக்கவேல் தலைமையிலான தனிப்படை தான் சிலை கடத்தல் தொடர்பான வழக்குகளை விசாரிக்க வேண்டும் என்று ஐகோர்ட்டு தெரிவித்தது.

பொன்மாணிக்கவேல் இந்த வழக்கை மேலும் விசாரிக்க இருப்பதால் சிலை கடத்தலில் தொடர்புடைய முக்கிய பிரமுகர்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.

சிலை கடத்தலில் தொடர்புடைய முக்கிய பிரமுகர்கள் பலர் முன் ஜாமீன் பெற்று இருக்கிறார்கள். ஐகோர்ட்டின் அனுமதியை பெற்று அவர்களிடம் விசாரணை நடத்த பொன் மாணிக்கவேல் தலைமையிலான தனிப்படை முடிவு செய்துள்ளது.

அவரது விசாரணை மேலும் 1 ஆண்டுக்கு இருப்பதால் முக்கிய பிரமுகர்கள் சிக்குவார்கள் என்று தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக எதிர்பார்க்கப்படுகிறது.  #statuesmuggling #ponmanickavel 

Tags:    

Similar News