உள்ளூர் செய்திகள்
பயிற்சி மாணவர்கள் போராட்டம்

ஊக்கத்தொகை வேண்டி பயிற்சி மருத்துவர்கள் காலவரையற்ற போராட்டம்

Published On 2022-01-15 02:31 GMT   |   Update On 2022-01-15 02:31 GMT
மற்ற அரசு மருத்துவக் கல்லூரிகளில் ஒவ்வொரு பயிற்சி மருத்துவருக்கும் ரூ.25,000 வரை ஊக்கத்தோகை வழங்கப்படுவதாக தெரிவித்தனர்.
சிதம்பரம்:

சிதம்பரத்தில், மாதாந்திர ஊக்கத்தொகை வேண்டி அண்ணாமலை பல்கலைக்கழக மருத்துவ கல்லூரி பயிற்சி மருத்துவர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவக் கல்லூரியில் பணியாற்றும் இளநிலை பயிற்சி மருத்துவர்களுக்கு கடந்த 8 மாதமாக ஊக்கத் தொகை வழங்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. 

இதைத் கண்டிக்கும் வகையில் பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் சுமார் 75 பயிற்சி மருத்துவர்கள் இன்று திடீர் போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.  
 
இதுபற்றி பயிற்சி மருத்துவர்கள் கூறியதாவது:- 

கடலூர் அரசு மருத்துவக் கல்லூரியாக இந்த கல்லூரி மாற்றப்பட்டு 8 மாதங்களாக எங்களுக்கு மாதாந்திர ஊக்கத் தொகை வழங்கப்படவில்லை. மற்ற அரசு மருத்துவக் கல்லூரிகளில் ஒவ்வொரு பயிற்சி மருத்துவருக்கும் மாதாந்திர உதவித்தொகை 25 ஆயிரம் ரூபாய் வரை வழங்கப்படுகிறது. ஆனால், பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரியில் ஒரு ரூபாய் கூட ஊக்கத் தொகை வழங்கப்படவில்லை.

அரசு கல்லூரி பயிற்சி மருத்துவர்கள் போல நாங்களும் கொரோனா பணிகள் உள்ளிட்ட பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வருகிறோம். எங்களில் 45 பேர் வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். எங்களுக்கு ஊக்கத் தொகை வழங்கக்கோரி அரசுக்கு பலமுறை தெரிவித்தும் இதுவரை வழங்கப்படவில்லை. 

அதனால் தமிழக முதல்வர் உடனடியாக தலையிட்டு பயிற்சி மருத்துவர்களுக்கு மாதாந்திர உதவித்தொகை வழங்க உத்தரவிட வேண்டும். இதை நிறைவேற்றும் வரை காலவரையற்ற போராட்டம் நடைபெறும்.

இவ்வாறு தெரிவித்துள்ளனர்.
Tags:    

Similar News