செய்திகள்
மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன்

மத்திய பட்ஜெட்டில் வருமான வரி விகிதம் குறைக்கப்படும் - நிர்மலா சீதாராமன் தகவல்

Published On 2019-12-08 01:06 GMT   |   Update On 2019-12-08 01:06 GMT
மத்திய பட்ஜெட்டில் தனிநபர் வருமான வரி விகிதம் குறைக்கப்படும் என நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் கூறினார்.
புதுடெல்லி:

டெல்லியில் நேற்று நடந்த ஒரு மாநாட்டில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் நாட்டின் பொருளாதாரத்துக்கு புத்துயிரூட்ட பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது:-

பொருளாதார மந்தநிலையை பொறுத்தவரை அது சில குறிப்பிட்ட துறைகள் சார்ந்தது. இதில் சில துறைகளில் மந்தநிலை சீரடைந்துள்ளது. சில துறைகளுக்கு இன்னும் உதவி தேவைப்படுகிறது. மிகப்பெரும் உத்வேகத்திலேயே எனது கவனம் இருக்கிறது.

பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள இந்த தொய்வை சீரமைத்து, பொருளாதாரத்துக்கு புத்துயிர் அளிப்பதற்காக அரசு ஏராளமான நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. இதற்காக ஆகஸ்டு மற்றும் செப்டம்பர் மாதங்களில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

மக்களிடையே நுகர்வுத்தன்மையை அதிகரிக்க பொதுத்துறை வங்கிகள் சுமார் ரூ.5 லட்சம் கோடி அளவுக்கு வழங்கி இருக்கிறது. மக்களிடம் அதிக நிதி கையிருப்புக்காக தனிநபர் வருமான வரி விகிதத்தை குறைக்கும் திட்டமும் உள்ளது. நாங்கள் பரிசீலித்து வரும் பல்வேறு அம்சங்களில் இதுவும் ஒன்று. இதற்கு நீங்கள் அடுத்த மத்திய பட்ஜெட் வரை காத்திருக்க வேண்டும்.

இதைப்போல வரி விதிப்பை அரசு எளிதாக்கி தொல்லையில்லா வரி வசூலை ஏற்படுத்தும். இதற்காக வரி விசாரணைகளுக்கு நாங்கள் ஏற்கனவே புதிய நடைமுறையை தொடங்கி உள்ளோம்.

ஜி.எஸ்.டி. ஒரு சிறந்த சட்டமாகும். இந்தியாவுக்கு இது அதிகம் தேவைப்பட்டது. ஜி.எஸ்.டி. கவுன்சிலின் ஒவ்வொரு கூட்டத்திலும் ஜி.எஸ்.டி. விகிதத்தை குறைப்பதிலேயே கவனம் செலுத்தப்பட்டது.

இவ்வாறு நிர்மலா சீதா ராமன் கூறினார்.
Tags:    

Similar News