செய்திகள்
கண்காணிப்பு கேமராவில் பதிவான மர்ம ஆசாமி.

போலீஸ் என மிரட்டி கடையில் இருந்த சிறுமியிடம் பணம் பறிப்பு- மர்ம ஆசாமிக்கு வலைவீச்சு

Published On 2021-02-22 17:13 GMT   |   Update On 2021-02-22 17:13 GMT
குலசேகரம் அருகே போலீஸ் எனக்கூறி கடையில் பண மோசடி செய்த மர்ம ஆசாமியை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
குலசேகரம்:

குலசேகரம் அருகே செருப்பாலூர் பகுதியை சேர்ந்தவர் பிரகாஷ் (வயது 47). இவர் அப்பகுதியில் உள்ள அம்மன் கோவில் அருகே சூப்பர் மார்க்கெட் நடத்தி வருகிறார்.

இந்தநிலையில் சம்பவத்தன்று மதியம் பிரகாஷ் தனது 15 வயது மகளை கடையில் உட்கார வைத்து விட்டு, வீட்டுக்கு சாப்பிட சென்றார். அந்த சமயத்தில் டிப்-டாப் உடை அணிந்த ஆசாமி ஒருவர் மோட்டார் சைக்கிளில் வந்தார். அவர் கடைக்குள் வந்து, பொருட்கள் வாங்கினார். அதற்கு ரூ.2 ஆயிரம் கொடுத்து சில்லறையை வாங்கி சென்றார்.

சிறிது நேரம் கழித்து அதே ஆசாமி கடைக்கு வந்து, சிறுமியிடம் நான் ரூ.2 ஆயிரம் கொடுத்தேன். மீதி பணம் தரவில்லை என கூறினார். அதற்கு சிறுமி, மீதி பணத்தை கொடுத்து விட்டேன் என்று கூறினார். இதனால் அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது.

உடனே அந்த ஆசாமி நான் போலீஸ் என்னையே மிரட்டுகிறாயா? என்று சத்தமாக பேசினார். இதனால் மிரண்டு போன சிறுமி ரூ.2 ஆயிரத்தை திருப்பிக் கொடுத்தார். அதை வாங்கி கொண்டு மர்ம ஆசாமி சென்று விட்டார்.

சிறிது நேரத்தில் பிரகாஷ் கடைக்கு வந்தார். அவரிடம் நடந்த சம்பவத்தை சிறுமி கூறினார். அதைத்தொடர்ந்து பிரகாஷ் குலசேகரம் போலீசில் புகார் செய்தார்.

அதன்பேரில் போலீசார் கடைக்கு வந்து விசாரித்தனர். அங்கிருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை பார்த்தபோது, அந்த ஆசாமியின் உருவம் பதிவாகி இருந்தது. அவருக்கு சுமார் 40 வயது இருக்கும். கோவை பதிவு எண் கொண்ட மோட்டார் சைக்கிளில் வந்ததும் தெரியவந்தது. இதபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம ஆசாமியை வலைவீசி தேடி வருகிறார்கள்.
Tags:    

Similar News