செய்திகள்
மழையால் சாலை சேறும், சகதியுமாக காணப்படுவதை படத்தில் காணலாம்.

கூடலூரில் மழை: சேறும், சகதியுமாக மாறிய சளிவயல்- குறும்பர்பாடி சாலை

Published On 2021-10-11 13:26 GMT   |   Update On 2021-10-11 13:26 GMT
கூடலூரில் பெய்த மழையால் சளிவயலில் இருந்து குறும்பர்பாடிக்கு செல்லும் சாலை சேறும், சகதியுமாக காணப்படுகிறது. இதனால் அவதியடைந்த பொதுமக்கள் தார்சாலை அமைக்க கோரிக்கை விடுத்து உள்ளார்கள்.
கூடலூர்:

கூடலூர் நகராட்சிக்கு உட்பட்ட சளிவயல், மில்லிக்குன்னு உள்பட பல இடங்களில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இதேபோல் ஆதிவாசி மக்களும் குடியிருந்து வருகின்றனர். இந்த நிலையில் சளிவயலில் இருந்து மில்லிக்குன்னு வழியாக ஆதிவாசி மக்களின் குரும்பர்பாடி கிராமத்துக்கு சாலை செல்கிறது. அந்த சாலை வழியாக அடிப்படை மற்றும் அத்தியாவசிய தேவைகளுக்காக பொதுமக்கள் கூடலூர் சென்று திரும்புகின்றனர்.

இதனால் ஏராளமானவர்கள் இச்சாலையை பயன்படுத்தி வருகின்றனர். சில ஆண்டுகளாக சளி வயலில் இருந்து குரும்பர்பாடிக்கு செல்லும் சாலை மிகவும் பழுதடைந்து காணப்படுகிறது. இதனால் மழைக்காலங்களில் சேறும், சகதியுமாக மாறி விடுகிறது. எனவே பொதுமக்கள் நடந்து செல்ல முடியவில்லை. தற்போது பெய்த மழையால் சாலை மேலும் பழுதடைந்து உள்ளது. இதனால் வாகனங்களையும் இயக்குவதில் சிரமம் ஏற்பட்டு வருகிறது.

மேலும் சேறும், சகதியுமாக உள்ளதால் பொதுமக்கள் பலர் வழுக்கி கீழே விழுந்து விடுகின்றனர். சேறும், சகதியுமாக காணப்படும் சாலையை புதுப்பிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் பழுதடைந்த சாலையால் மக்கள் அவதி அடைந்து வருகின்றனர். இதனிடையே நேற்று அப்பகுதி மக்கள் சாலையை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:- எங்கள் பகுதியில் சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். பல ஆண்டுகளாக சாலை பழுதடைந்து சேறும், சகதியுமாக உள்ளது. இது சம்பந்தமாக பலமுறை கோரிக்கை விடுத்தும் சாலை புதுப்பிக்கப்படவில்லை. இதனால் தற்காலிகமாக சீரமைப்பு பணி மேற்கொண்டு வருகிறோம். விரைவாக அதிகாரிகள் தார்சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
Tags:    

Similar News