செய்திகள்
அமைச்சர் சேகர்பாபு

கோவில்களுக்கு விரைவில் அறங்காவலர்கள் நியமனம்- அமைச்சர் சேகர்பாபு

Published On 2021-11-18 07:38 GMT   |   Update On 2021-11-18 07:38 GMT
இந்து சமய அறநிலையத்துறையின் 463 பிரிவு சட்ட விதிகளின்படி ரூ.10 லட்சத்திற்கு அதிகமாக வருமானம் ஈட்டக்கூடிய 539 பெரிய திருக்கோவில்கள் உள்ளன
சென்னை:

தமிழக இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் 539 பெரிய திருக்கோவில்கள் செயல்படுகின்றன. இதுதவிர 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறிய அளவிலான கோவில்களும் இயங்குகின்றன.

இந்த கோவில்களில் அறங்காவலர்களை நியமிக்கும் பணியை இந்து சமய அறநிலையத்துறை தொடங்கி உள்ளது. அதற்கான ஆரம்பகட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.

இதுகுறித்து இந்த சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு கூறியதாவது:-

இந்து சமய அறநிலையத்துறையின் 463 பிரிவு சட்ட விதிகளின்படி ரூ.10 லட்சத்திற்கு அதிகமாக வருமானம் ஈட்டக்கூடிய 539 பெரிய திருக்கோவில்கள் உள்ளன. இந்த கோவில்களில் அறங்காவலர்களை நியமிக்கும் பணி தொடங்கி உள்ளது. அதற்கான விளம்பரம் வெளியிடப்பட்டுள்ளது.

அதன் மூலம் பெறப்படும் விண்ணப்பங்களை பரிசீலனை செய்து அறங்காவலர்கள் நியமிக்கப்படுவார்கள். நேர்முகத்தேர்வு நடத்தி தகுதி உள்ளவர்களை அறங்காவலர்களாக நியமிக்க வேண்டும் என்று முதல்-அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

அதேபோல 32 மாவட்டங்களில் மாவட்ட அறங்காவலர் குழுக்கள் இல்லை. அந்த மாவட்டங்களிலும் அறங்காவலர் குழுக்களை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

அறங்காவலர்களாக நியமிக்கப்படுபவர்கள் ஆன்மீக ஈடுபாடு, கோவில் திருப்பணிகளில் ஆர்வம், உபயதாரர் போன்றவர்களுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தி உள்ளார்.

அதன் அடிப்படையில் அறங்காவலர்கள் நியமிக்கப்படுவார்கள். ஒரு கோவிலுக்கு 5 அறங்காவலர்கள் நியமிக்கப்படுவார்கள். அதில் ஒருவர் அறங்காவலர் குழு தலைவராக தேர்ந்தெடுக்கப்படுவார். விரைவில் அறங்காவலர்கள் நியமனம் செய்யப்படுவார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News