செய்திகள்
திற்பரப்பு அருவியில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீர்

குமரியில் விடிய விடிய மழை- 12 மலை கிராமங்கள் மீண்டும் துண்டிப்பு

Published On 2021-11-26 05:48 GMT   |   Update On 2021-11-26 05:48 GMT
குமரியில் தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக மாவட்டத்தின் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் தேங்கி வருகிறது. இதுவரை 1050 வீடுகள் இடிந்துள்ளன.
நாகர்கோவில்:

தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது.

இந்த நிலையில் தென்மேற்கு வங்கக்கடலில் நிலவிய காற்று சுழற்சி காரணமாக தென்தமிழகத்தில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. அதன்படி நேற்று காலை முதல் குமரி மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்தது.

அதிகாலையில் தொடங்கிய மழை நாள் முழுவதும் விடாது பெய்தபடி இருந்தது. கன்னியாகுமரி, கொட்டாரம், சுசீந்திரம், நாகர்கோவில், தக்கலை, குழித்துறை, களியக்காவிளை, குலசேகரம், திருவட்டார், பேச்சிப்பாறை, பூதப்பாண்டி என மாவட்டம் முழுவதும் மழை பெய்தபடி இருந்தது.

இதனால் குமரி மேற்கு மாவட்டத்தின் மலை கிராமங்களுக்கு செல்லும் பாதைகள் வெள்ளத்தில் மூழ்கியது. கோதையாறு, குற்றியாறு பகுதியிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

இதன் காரணமாக மோதிரமலை, தச்சமலை, முடவன் பொற்றை, கல்லாறு உள்பட 12 மலை கிராமங்கள் துண்டிக்கப்பட்டன. தரை பாலங்கள் வெள்ளத்தில் மூழ்கியதால் அங்குள்ள மக்கள் நகர் பகுதிக்கு வர முடியாத நிலை ஏற்பட்டது. கடந்த 12-ந் தேதி பெய்த மழையின்போதும் இக்கிராமங்கள் துண்டிக்கப்பட்டு மக்கள் அவதிக்கு ஆளானார்கள். இந்த நிலையில் இப்போது பெய்து வரும் மழையால் மீண்டும் இந்த கிராமங்கள் துண்டிக்கப்பட்டு உள்ளன.

மேலும் மலைப்பகுதியில் பெய்யும் மழையுடன், அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதியிலும் பலத்த மழை பெய்தது. இதனால் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றார் மற்றும் அனைத்து அணைகளுக்கும் வரும் நீரின் அளவும் அதிகரித்தது.

அணைகள் அனைத்தும் ஏற்கனவே முழு கொள்ளளவை எட்டியிருந்ததால் அணைகளுக்கு வரும் நீர் அப்படியே திறந்து விடப்படுகிறது. இதனால் ஆறுகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

அணையில் இருந்து திறந்து விடப்பட்ட உபரிநீருடன், மழை வெள்ளமும் சேர்ந்து கொள்ள குழித்துறை ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. அதேநேரம் மழை இன்னும் ஓயாததால் ஆறுகள் மற்றும் கால்வாய்களில் கூடுதல் வெள்ளம் வர வாய்ப்பு உள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் கருதுகிறார்கள்.

எனவே ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லும்படி மாவட்ட கலெக்டர் அரவிந்த் அறிவித்து உள்ளார். மேலும் பொதுப்பணித்துறை அதிகாரிகளும் இந்த பகுதிகளை 24 மணி நேரமும் கண்காணித்து வருகிறார்கள்.

குமரியில் தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக மாவட்டத்தின் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் தேங்கி வருகிறது. இதுவரை 1050 வீடுகள் இடிந்துள்ளன.



இந்த நிலையில் இப்போது மீண்டும் மழை பெய்து வருவதால் நேற்றும் ஒரே நாளில் 26 வீடுகள் இடிந்தன. இதில் அகஸ்தீஸ்வரம் தாலுகாவில் 26 வீடுகளும், விளவங்கோடு தாலுகாவில் 5 வீடுகளும், கிள்ளியூர் தாலுகாவில் 6 வீடுகளும் என மொத்தம் 26 வீடுகள் சேதமடைந்துள்ளன.

குமரி மாவட்டத்தில் கடந்த 12 மற்றும் 13-ந் தேதிகளில் இடைவிடாத மழை பெய்தது. இதனால் மாவட்டமே வெள்ளத்தில் மிதந்தது. சுமார் 50 ஆயிரம் வீடுகளுக்குள் மழை வெள்ளம் புகுந்தது. வைக்கலூர், கலிங்கராஜபுரம், பள்ளிக்கல், தோவாளை, சுசீந்திரம் என பல பகுதிகளிலும் மக்கள் பெரும் அவதிக்கு ஆளானார்கள்.

ஏராளமான சாலைகள் துண்டிக்கப்பட்டன. குளங்கள், கால்வாய்கள் உடைந்தது. ஆயிரக்கணக்கான ஏக்கரில் பயிர் நிலங்கள் சேதமடைந்தன. குமரியின் மழை சேதங்களை முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் கடந்த 15-ந் தேதி நேரில் ஆய்வு செய்தார். இந்த நிலையில் குமரி மாவட்டத்தில் மீண்டும் மழை பெய்து வருவது மாவட்ட மக்களை பீதியில் ஆழ்த்தி உள்ளது.

குமரி மாவட்டத்தில் விடிய, விடிய பெய்து வரும் மழை காரணமாக மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது.


Tags:    

Similar News