செய்திகள்
காபுல் தாக்குதல்

ஆப்கானிஸ்தான்: அடுத்தடுத்து ராக்கெட் தாக்குதல் - 8 பேர் பலி

Published On 2020-11-21 11:04 GMT   |   Update On 2020-11-21 11:04 GMT
ஆப்கானிஸ்தான் தலைநகரில் இன்று ராக்கெட் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 8 பேர் உயிரிழந்தனர்.
காபுல்:

ஆப்கானிஸ்தானின் தலிபான் பயங்கரவாதிகளுக்கும் அரசுப்படைகளுக்கும் இடையே 19 ஆண்டுகளாக நடந்து வரும் உள்நாட்டுப்போரை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்கா முயற்சி மேற்கொண்டது.

அதன் பயனாக தலிபான்கள் - ஆப்கானிஸ்தான் அரசு இடையே கத்தார் நாட்டின் தோஹா நகரில் வைத்து அமைதி பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

அமைதி பேச்சுவார்த்தை ஒரு பக்கம் நடைபெற்று வந்தாலும் வந்தாலும் தலிபான் பயங்கரவாதிகள் ஆப்கானிஸ்தானில் தங்கள் தாக்குதல்களை தொடர்ந்து நடத்தி வருகின்றனர். தலிபான்களின் தாக்குதல்களுக்கு உள்நாட்டு ராணுவத்தினர் தக்க பதிலடி கொடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், அந்நாட்டின் தலைநகர் காபுலில் சர்வதேச நாடுகளின் தூதரகங்கள் அமைந்துள்ள ’கிரீன் சோன்’ பகுதியில் இன்று காலை அடுத்தடுத்து ராக்கெட் தாக்குதல் நடத்தப்பட்டது.

மொத்தம் 23 ராக்கெட்கள் ஏவப்பட்டன. இதில் பல நாடுகளின் தூதரக கட்டிடங்களின் சுற்றுசுவர்கள் இடிந்து சிதைவடைந்தது. மேலும், குடியிருப்பு பகுதியில் ராக்கெட்டுகள் விழுந்தன. இதனால், பல கட்டிடங்கள் இடிந்து
விழுந்தன.

இந்த ராக்கெட் தாக்குதலில் பொதுமக்கள் 8 பேர் உயிரிழந்தனர். 31 பேர் படுகாயமடைந்தனர். மேலும், பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. 

இந்த கோர தாக்குதலுக்கு தலிபான் பயங்கரவாதிகள் தான் காரணம் என ஆப்கானிஸ்தான் உள்துறை அமைச்சகம் குற்றம் சுமத்தியுள்ளது. உள்துறை அமைச்சகத்தின் குற்றச்சாட்டிற்கு தலிபான் பயங்கரவாத அமைப்பு மறுப்பு தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், தோஹா நடந்துவரும் தலிபான் - ஆப்கான் அரசு இடையேயான அமைதி பேச்சுவார்த்தையில் பங்கேற்பதற்காக அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி மைக் பாம்பியோ கத்தார் நாட்டிற்கு சென்றுள்ளார். 

இந்த பயணத்தின்போது தலிபான் அமைப்பின் பேச்சுவார்த்தைகுழு ஒருங்கிணைப்பாளரை பாம்பியோ சந்தித்து பேச உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 
Tags:    

Similar News