செய்திகள்
நெதர்லாந்தில் இருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட போதை மாத்திரைகள்.

நெதர்லாந்தில் இருந்து சென்னைக்கு ரூ.5 லட்சம் போதை மாத்திரைகள் கடத்தல்

Published On 2020-09-28 19:57 GMT   |   Update On 2020-09-28 19:57 GMT
நெதர்லாந்தில் இருந்து சென்னைக்கு கடத்திய ரூ.5 லட்சம் மதிப்புள்ள போதை மாத்திரைகளை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
ஆலந்தூர்:

சென்னை மீனம்பாக்கம் விமான நிலைய பன்னாட்டு தபால் சரக்ககப்பிரிவுக்கு விமானத்தில் வரும் பார்சல்களை சுங்க இலாகா அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது நெதர்லாந்து நாட்டில் இருந்து சென்னை மற்றும் திருப்பூர் ஆகிய பகுதிகளில் உள்ள முகவரிக்கு 2 பார்சல்கள் வந்தன.

அந்த பார்சலில் கொரோனா மருந்து இருப்பதாக குறிப்பிடப்பட்டு இருந்தது. ஆனால் அந்த பார்சல்கள் மீது சந்தேகம் அடைந்த சுங்க இலாகா அதிகாரிகள், அவற்றை பிரித்து பார்த்தனர். அதில் போதை மாத்திரைகள் கடத்தி வரப்பட்டு இருந்ததை கண்டுபிடித்தனர்.

அந்த பார்சல்களில் இருந்த தடை செய்யப்பட்ட விலை உயர்ந்த 165 போதை மாத்திரைகளை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அவற்றின் மதிப்பு ரூ.5 லட்சம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

அந்த பார்சல்களில் எழுதப்பட்டு இருந்த சென்னை மற்றும் திருப்பூர் பகுதியில் உள்ள முகவரிக்கு சென்று விசாரித்தபோது அவை போலியானது என தெரியவந்தது. வெளிநாடுகளில் இருந்து கடத்தப்பட்டு வரும் போதை மாத்திரைகளை கல்லூரி மாணவர்கள், வசதி படைத்த இளைஞர்களுக்கு ரூ.5 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரை விற்பனை செய்யப்படுவதாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக சுங்க இலாகா அதிகாரிகள் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
Tags:    

Similar News