ஆன்மிகம்
மேல்கோட்டை செலுவநாராயணசாமி

செலுவநாராயணசாமி கோவிலில் வைரமுடி உற்சவத்தில் பங்கேற்க கடும் கட்டுப்பாடுகள்

Published On 2021-03-16 06:10 GMT   |   Update On 2021-03-16 06:10 GMT
மேல்கோட்டை செலுவநாராயணசாமி கோவிலில் நடைபெறும் வைரமுடி உற்சவத்தில் பக்தர்கள் பங்கேற்க பக்தர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
மண்டியா மாவட்டம் பாண்டவபுரா தாலுகா மேல்கோட்டையில் பிரசித்தி பெற்ற செலுவ நாராயணசாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு வைர முடி உற்சவம் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதாவது சாமிக்கு தங்க கவசம் அணிவித்து வீதி உலா வரும் நிகழ்வே வைரமுடி உற்சவம் என அழைக்கப்படுகிறது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொள்வார்கள்.

ஆனால் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால், வைரமுடி உற்சவம் ரத்து செய்யப்பட்டது. இதனால் பக்தர்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்தனர். இந்த நிலையில் மாநிலத்தில் கொரோனா பரவல் இன்னும் குறையவில்லை. அதோடு அண்டை மாநிலங்களான மராட்டியம், கேரளா ஆகிய மாநிலங்களில் கொரோனா 2-வது கட்ட அலை தொடங்கியுள்ளது.

இதனால் இந்த ஆண்டு மேல்கோட்டை செலுவநாராயணசாமி கோவில் வைரமுடி உற்சவம் நடைபெறுமா என்ற கேள்வி எழுந்தது. இந்த நிலையில் மாவட்ட கலெக்டர் அஸ்வதி தலைமையில் வைரமுடி உற்சவம் தொடர்பான ஆலோசனை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில், இந்த ஆண்டு வைரமுடி உற்சவ விழாவை வருகிற 19-ந்தேதி முதல் 24-ந்தேதி வரை கொண்டாடுவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு வைரமுடி உற்சவம் கொண்டாடப்படாததால், 19-ந்தேதி முதல் 21-ந்தேதி வரை 3 நாட்களுக்கு கலச பூஜை நடத்துவது என்றும், 22-ந்தேதி முதல் 24-ந்தேதி வரை வைரமுடி உற்சவம் நடத்துவது எனவும் தீர்மானிக்கப்பட்டு உள்ளது.

அத்துடன் தற்போது கொரோனா பரவல் அதிகரித்து வருவதால், இந்த விழாவில் பக்தர்கள் கலந்துகொள்ள கடும் கட்டுப்பாடுகளை விதிக்கவும் இந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. அதாவது, பிற மாவட்ட பக்தர்கள், வெளிமாநில பக்தர்கள் கலந்துகொள்ள தடை விதிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவல் காரணமாக இந்த ஆண்டு வைரமுடி உற்சவத்தை எளிமையாக நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதாவது வைரமுடி விழாவில் பங்கேற்க கோவிலுக்குள் 100 பேரையும், கோவிலுக்கு வெளியே 2 ஆயிரம் பேரையும் அனுமதிப்பது எனவும், அவர்கள் அனைவருக்கும் கைகளில் முத்திரை குத்துவது எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. அத்துடன் விடிய, விடிய நடைபெறும் வைரமுடி உற்சவத்தை இந்த ஆண்டு 24-ந்தேதி நள்ளிரவு 12 மணிக்குள் நடத்தி முடிப்பது என்றும் இந்த ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த விழா நிகழ்ச்சி-நிரல் தொடர்பான அறிவிப்பு கோவில் தகவல் பலகையில் ஒட்டப்பட்டுள்ளது.
Tags:    

Similar News