செய்திகள்
கருப்பு பூஞ்சை நோய்க்கு தடுப்பூசி போட்டு கொண்ட 27 பேருக்கு வாந்தி

கருப்பு பூஞ்சை நோய்க்கு தடுப்பூசி போட்டு கொண்ட 27 பேருக்கு வாந்தி

Published On 2021-06-06 12:55 GMT   |   Update On 2021-06-06 12:55 GMT
மத்திய பிரதேசத்தில் கருப்பு பூஞ்சை நோய்க்கு ஆம்போடெரிசின் பி தடுப்பூசி போட்டு கொண்ட 27 நோயாளிகளுக்கு வாந்தி உள்ளிட்ட கடுமையான எதிர்வினை ஏற்பட்டு உள்ளது.
போபால்:

இந்தியாவில் கொரோனாவின் 2வது அலை தீவிர பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது.  கொரோனா தொற்று ஏற்பட்ட நபர்களுக்கு, அதன் தொடர்ச்சியாக கருப்பு பூஞ்சை நோய் தொற்றும் ஏற்பட்டு வருகிறது.  இதனால், மக்கள் அதற்கும் சிகிச்சை பெற வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர்.

கொரோனா சிகிச்சைக்கு ஸ்டீராய்டு மருந்துகளை அதிகம் பயன்படுத்துபவர்களுக்கு இந்நோய் பாதிப்பு ஏற்பட கூடிய சாத்தியம் அதிகமுள்ளது என கூறப்படுகிறது.  நாட்டின் பல பகுதிகளில் கருப்பு பூஞ்சை நோய் பாதிப்பு காணப்படுகிறது.

இதனை முன்னிட்டு ராஜஸ்தான், தெலுங்கானா, தமிழகம், ஒடிசா, குஜராத், பஞ்சாப், அரியானா, கர்நாடகா, பீகார் மற்றும் மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்கள் இதனை தொற்று நோய் சட்டத்தின் கீழ் அறிவிக்கப்பட்ட தொற்று நோயாக அறிவித்து உள்ளது.

நாடு முழுவதும் ஆயிரக்கணக்கானோருக்கு இந்த நோய் பாதிப்பு காணப்படுகிறது.  இதனை கட்டுக்குள் கொண்டு வர அரசும் முயற்சி எடுத்து வருகிறது.  இந்நிலையில், மராட்டியத்தில் கடந்த 2 நாட்களுக்கு முன்வரை கருப்பு பூஞ்சை நோய்க்கு 476 பேர் உயிரிழந்து உள்ளனர் என மாநில சுகாதார துறை தெரிவித்து உள்ளது.  இதேபோன்று, 5,763 பேர் பாதிக்கப்பட்டும் உள்ளனர் என தெரிவித்து உள்ளது.

மராட்டியத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து காணப்படுவதுபோல் அதன் தொடர்ச்சியாக கருப்பு பூஞ்சை நோயாளிகளின் எண்ணிக்கையும் உயர்ந்து உள்ளது.  நோயாளிகளை குணப்படுத்த ஆம்போடெரிசின் பி தடுப்பூசி செலுத்தப்படுகிறது.

இந்நிலையில், மத்திய பிரதேசத்தின் சாகர் நகரில் உள்ள பண்டல்காண்ட் மருத்துவ கல்லூரியில் கருப்பு பூஞ்சை நோய்க்கு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு ஆம்போடெரிசின் பி தடுப்பூசி போடப்பட்டு உள்ளது.  அவர்களில் 27 பேருக்கு வாந்தி உள்ளிட்ட கடுமையான எதிர்வினை ஏற்பட்டு உள்ளது.

இதன்பின் அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இதனையடுத்து அவர்களின் உடல்நிலை சீராக உள்ளது என கல்லூரியின் செய்தி தொடர்பு நிர்வாகி டாக்டர் உமேஷ் கூறியுள்ளார்.

Tags:    

Similar News